பஸ்சை வழிமறித்த காட்டுமாடு
வால்பாறை: வால்பாறை நகரில் இருந்து, அக்காமலை எஸ்டேட் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு, 8:15 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. கருமலை வழியாக அக்காமலைக்கு செல்லும் வழியில், உமையாண்டி முடக்கு என்ற இடத்தில் ஒற்றைகாட்டுமாடு, பஸ்சை வழிமறித்து நடுரோட்டில் நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணியர் அச்சத்தில் கூச்சலிட்டனர். அரசு பஸ் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்ததால், சிறிது நேரத்திற்கு பின் காட்டுமாடு ஓரமாக சென்றது. அதன் பின், இரவு, 10:00 மணிக்கு வந்த அரசு பஸ்சையும் காட்டுமாடு வழிமறித்தது. வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அக்காமலை எஸ்டேட் செல்லும் வழித்தடத்தில் வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி போன்ற வனவிலங்குகள் ரோட்டை கடக்கின்றன. இது போன்ற சூழலில், வாகன ஓட்டுநர்கள் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது,’ என்றனர்.