உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணி அணையில் 80 மி.மீ., மழை பருவமழை ஆரம்பமே அமர்க்களம்

சிறுவாணி அணையில் 80 மி.மீ., மழை பருவமழை ஆரம்பமே அமர்க்களம்

கோவை: தென்மேற்கு பருவ மழை துவங்கியதால், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் கன மழை காணப்படுகிறது; சிறுவாணி அணை பகுதியில், 80 மி.மீ., பதிவாகியுள்ளது. இவ்வாண்டு பருவ மழை ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியுள்ளது.வழக்கமாக, தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் செப்., வரை பெய்யும். இவ்வாண்டு சற்று முன்னதாக நேற்றே துவங்கி விட்டது. கேரள வனப்பகுதி மற்றும் பாலக்காடு கணவாய், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், மழைப்பொழிவு காணப்படுகிறது.நேற்று முன்தினம் மாலையில் இருந்து, சிறுவாணி அணை மற்றும் அடிவாரப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடிவாரத்தில் 53 மி.மீ., அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 80 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.19 அடியாக நீர் மட்டம் இருக்கிறது. குடிநீர் தேவைக்காக, 6.2 கோடி லிட்டர் எடுக்கப்பட்டது. பருவ மழை ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியிருப்பதால், நடப்பாண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருக்காது.நேற்று காலை, 7:30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு:கோவை வேளாண் பல்கலை 14.40 மி.மீ., மதுக்கரை - 12, மாக்கினாம்பட்டி - 41, ஆனைமலை - 18, ஆழியாறு -12, சின்கோனா - 55, சின்னக்கல்லார் - 92, வால்பாறை - 32, சோலையாறு - 61, பில்லுார் அணை - 3, பெரியநாயக்கன்பாளையம் - 5.20, பீளமேடு விமான நிலையம் - 2.40 மி.மீ., பதிவாகியது.வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் பாலக்காடு கணவாய் பகுதிகளில், கனமழை துவங்கியிருக்கிறது. கேரளா, சிறுவாணி மலைப்பகுதி, நீலகிரி, வால்பாறை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில், 31ம் தேதி வரை மிக மற்றும் அதீத கனமழை பெய்யக்கூடும்.அனைத்து அணைகளுக்கும், நல்ல நீர்வரத்து இருக்கும். நொய்யல், பவானி, அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.கோவை நகர பகுதிக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு, லேசானது முதல் மிதமான மழை பெய்யும்; குளுகுளு கோவையை எதிர்பார்க்கலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை