தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சகோதரிகள்; ஸ்கெட்ச் போட்டு துாக்கிய தனிப்படையினர் 100 கேமரா ஆய்வு; 70 பஸ்சில் சென்று பிடித்த போலீசார்
கோவை; மாநகரில் ஒரு வருடமாக தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மாநகரில் பஸ்களில் நகை பறிப்பு சம்பவங்களில் கைவரிசை காட்டி வந்த நபர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவில் ஒரு பெண் போலீஸ் உட்பட நான்கு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.இதையடுத்து, நகை பறிப்பு சம்பவங்கள் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இதற்காக 100க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரு பெண்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் கணகாணிக்க துவங்கினர். பஸ்களில் ஏறி செயின் பறித்து செல்வதால், போலீசார் மாநகர பகுதியில் 70க்கும் மேற்பட்ட பஸ்களில் ஏறி பயணித்து செயின் பறிப்பு பெண்களை தேடி வந்தனர். அப்போது, டவுன் ஹால் பகுதியில் இளநீர் குடித்து கொண்டு இருந்த பெண்ணிடம், இரண்டு பெண்கள் நகை பறிக்க முயன்றுள்ளனர். இதைப்பார்த்த போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த முருகேஷ்வரி, 36, ராதா, 35 என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் திருடி, பதுக்கி வைத்திருந்த 20 சவரன் நகையை போலீசார் மீட்னர். தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கோவையில் 30க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த சகோதரிகள் கோவை மட்டுமின்றி கேரளாவிலும் செயின் பறிப்பு செய்துள்ளனர். கேரளாவில், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இருவரும் கோவைக்கு வந்து கோவில் திருவிழாக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களை நோட்டமிட்டு திருட்டை அரங்கேற்றி வந்தனர். அப்போது தான் அவர்கள் டவுன்ஹால் பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றது கண்ணில்பட்டது. மேலும், அவர்கள் நகை பறித்து அதன் மூலம் வந்த பணத்தில் ஊரில் நிலம், வீடு வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.