சோலையாறு நீர்மட்டம் 129 அடியாக உயர்வு
வால்பாறை: தொடர் மழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 129.95 அடியாக உயர்ந்தது.வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் காற்றுடன் கனமழை பெய்வதால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கனமழையால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.மொத்தம், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 129.95 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 3,955 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 872 கனஅடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடபட்டுள்ளது. இதே போல் 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 40.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,518 கனஅடி நீர்வரத்தும், 910 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. ஆழியாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:சோலையாறு - 34, பரம்பிக்குளம் - 15, ஆழியாறு - 2, வால்பாறை - 47, மேல்நீராறு - 68, கீழ்நீராறு - 53, காடம்பாறை - 9, சர்க்கார்பதி - 11, வேட்டைக்காரன்புதுார் - 8, மணக்கடவு - 5, துாணக்கடவு - 9, பெருவாரிப்பள்ளம் - 12, பொள்ளாச்சி - 5 என்ற அளவில் மழை பெய்தது.