மலையோர கிராமங்களில் முடங்கியது திடக்கழிவு மேலாண்மை; வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து
பெ.நா.பாளையம்; கோவை வடக்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திறம்பட செயல்படாததால், பிளாஸ்டிக் குப்பைகளை உண்ணும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழக்கின்றன.சமீபத்தில், மருதமலை அடிவாரத்தில், 18 வயது மதிக்கத்தக்க பெண் யானை வயிற்றில், 15 மாத ஆண் சிசுவுடன் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது. இச்சம்பவத்தில் யானையின் வயிற்றில் தொற்று ஏற்பட, பிளாஸ்டிக் பொருட்களை அவை சாப்பிட்டதும், அதில் உள்ள ரசாயனம் மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் தான் காரணம் என தெரியவந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே மலையோர கிராமங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இவற்றை உண்ணும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல்நிலை சிறிது, சிறிதாக பாதிக்கப்பட்டு, கடும் நோய் தொற்று ஏற்பட்டு, உடல் வருந்தி உயிர் இழக்கின்றன.மலையோரங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளும் பாதிக்கின்றன. இதற்கு காரணம், மலையோரங்களில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுவது இல்லை.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை, குருடம்பாளையம், நாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை என்பது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இங்கு பணியாற்றும் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்களிடமிருந்து சேகரித்தாலும், அவை முறையாக மேலாண்மை செய்வதில்லை. மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சில ஊராட்சிகள் தங்களுடைய குப்பைகளை டிராக்டர்களில் கொண்டு சென்று, மலை ஓர கிராமங்களில் உள்ள பள்ளங்களில் கொட்டுகின்றனர். இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குப்பை குவியல்களில் உள்ள உணவுகளை தேடித்தேடி உண்கின்றன. அப்போது பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் பரிதாபத்துக்கு தள்ளப்படுகின்றன.இது குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,' மலை கோவில்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் பூஜை பொருட்கள் கொண்டு செல்வது முழுமையாக தடை செய்யப்பட வேண்டும். சமீபத்தில், சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு இரு முடிகளில் கூட பிளாஸ்டிக் பைகள் இருக்கக் கூடாது என, கோயில் நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதேபோல, மலைகள் மற்றும் மலை ஓரங்களில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும்போது, பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்.இதை வனத்துறையினர் செக் போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டும். மேலும், உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில், மலையோர கிராமங்களில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதை அறவே தடை செய்வதோடு, வீடுகளில் இருந்து பெறப்படும் பிளாஸ்டிக் பைகளை பத்திரமாக அகற்றி, அவற்றை மறுசுழற்சி முறையில், பிற பொருள்களுடன் கலந்து பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தும் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கொல்ல பயன்படுத்தப்படும் அவுட் காயை விட, பிளாஸ்டிக் பைகள் மோசமானது என்பதை மலையோர கிராம மக்களுக்கு பிரசாரங்களின் வாயிலாக அறிவுரை வழங்க வேண்டும்' என்றனர்.