திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடக்கம்; ஆர்வம் காட்டாத உள்ளாட்சி அமைப்புகள்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடுகள்தோறும் குப்பைத் தொட்டி வழங்கி, குப்பையை தரம் பிரித்து அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கடந்த, 2021ல், மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, வீடு, கடை, வணிக நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை தரம் பிரிக்க வேண்டும்.அதாவது, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக பிரித்து, உள்ளாட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.அவ்வகையில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது, மக்காத பொருட்களை மறுசுழற்சிக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.திட்டம் துவக்கப்பட்டபோது, மக்களை ஊக்குவிக்கவும், குப்பையை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அரசு சார்பில் இரு வண்ண குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. இதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.ஆனால், தற்போது, பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக பின்பற்றப்படாமல் உரம் தயாரிப்பு முடங்கி உள்ளது. இதனால், மக்களிடையே பாலித்தீன் பயன்பாடு அதிகரித்துள்ளது.வீடுகளில் சேகரமாகும் குப்பை, பாலித்தீன் பைகளில் கட்டி, துாய்மைப் பணியாளர்களிடம் அளிக்கின்றனர். இதுஒருபுறமிருக்க, திறந்தவெளியில் குப்பை கொட்டுவதும் அதிகரித்துள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், திடக்கழிவு மேலாண்மை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்களும் குப்பையை தரம் பிரித்து அளிப்பதில்லை. வழக்கத்துக்கு மாறாக, பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பயன்பாடு அதிகரிக்கிறது.நிதி ஒதுக்கீடு பெற்று, குப்பைத் தொட்டி வழங்க, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். மக்களிடையே குப்பையை தரம் பிரித்து அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.