பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரோடுகள் விரிவாக்கம் செய்து, ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், நெரிசல் பிரச்னை குறையாமல் அதிகரித்துள்ளது. ரவுண்டானா பகுதிகளில் தினமும் வாகனங்கள் மோதும் சம்பவங்கள் நடக்கிறது. இதற்குரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி நகரம், கோவை, கேரளா மாநிலத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நகரில், நெரிசல் பிரச்னையை தீர்க்க ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதற்காக கையகப்படுத்த தனியார் நிலங்களுக்கு, 33.57 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. ரோடு விரிவாக்கப்பணிகள், 34.61 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டன. அதில், ரோடு சந்திப்பு பகுதியான, மரப்பேட்டை, தேர்நிலையம், தலைமை தபால் அலுவலகம், காந்தி சிலை, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டது.இதனால், நெரிசல் குறையும் என எதிர்பார்த்தால் வழக்கத்தை விட நெரிசல் பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. ரவுண்டானா பகுதிகளில், நான்கு பக்கத்தில் இருந்தும் வாகனங்கள் ஒரே நேரத்தில் திரும்ப முற்படும் போது நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் வேகமாக வருவதாலும்; தாறுமாறாக செல்லும் போதும் விபத்து ஏற்படுகிறது. நேற்றும், பஸ் ஸ்டாண்ட் அருகே வாகனங்கள் மோதிக்கொண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபோன்று தினமும் இரண்டு அல்லது மூன்று விபத்துகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. தொடர் சம்பவங்களால் வாகன ஓட்டுநர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர். பண்டிகை, முகூர்த்த நாட்களில், வாகன நெரிசல் பிரச்னை அதிகரிக்கிறது. அப்போது, நகரத்தை வாகனங்கள் கடந்து செல்ல அரை மணி நேரத்துக்கு மேலாகிறது. ரவுண்டானா பகுதியில் இருந்து அனைத்து ரோடுகளிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் உடனடியாக நகரை கடக்க முடியாத நிலை நீடிக்கிறது. இதற்கு தீர்வு காண மீண்டும் சிக்னல் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ரோடு விரிவுப்படுத்திய பகுதிகளில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தாமல், கார், பைக், பார்க்கிங் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. கோவை ரோடு, உடுமலை ரோடு நோ - பார்க்கிங் பகுதியிலும் வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுகின்றன. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் என, முன்பே கணித்ததால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், உடுமலை ரோடு - கோவை ரோட்டை இணைக்கும் வகையில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அரசியல் தலையீடால், அந்த திட்டம் ஆய்வு நிலையிலேயே கைவிடப்பட்டது. ரவுண்டானா பகுதிகளில் வாகனங்களை இயக்குவதில் ஏற்படும் விதிமுறை மீறல்களால் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதற்குரிய தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு, கூறினர்.
விதிமுறை கற்பிப்பது அவசியம்!
முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் கூறியதாவது: ரவுண்டானாக்கள் அமைத்த பின், அதில் வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. எவ்வளவு வேகத்தில் வந்தாலும், ரவுண்டானா பகுதியில், 10 கி.மீ., வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். வலது புறம் வருவோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ரவுண்டானாவில் பாதியளவுக்கு வாகனங்களில் வந்தோருக்கு வழிவிட வேண்டும். இதுபோன்று விதிமுறைகளை கடைபிடித்தால், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில், முப்பது விநாடிகளில் வாகனங்கள் கடக்க முடியும். டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்று, பொதுமக்களுக்கும் விளக்குவது அவசியம். கோவையில், சிக்னல்கள் அகற்றப்பட்டு ரவுண்டானாக்கள் அமைத்த பின், விபத்துக்கள் குறைந்துள்ளன. பொள்ளாச்சி நகரிலும் ரவுண்டானாக்களில் விபத்துகளை தவிர்க்கவும், நெரிசலை கட்டுப்படுத்தவும் விதிமுறைகளை கற்றுத்தருவதான் தீர்வாக இருக்கும். இவ்வாறு, கூறினார்.