உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாமியார் கையை வெட்டிய மருமகன் கைது குடும்ப பிரச்னையால் விபரீதம்

மாமியார் கையை வெட்டிய மருமகன் கைது குடும்ப பிரச்னையால் விபரீதம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மாமியாரின் கையை அரிவாளால் வெட்டிய மருமகனை தாலுகா போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே, நெடும்பாறையை சேர்ந்தவர் நந்தினி,26. இவர், குடும்ப பிரச்னை காரணமாக கணவர் ரவியை,36, பிரிந்து சுந்தராபுரத்தில் உள்ள தாய் தங்கமணி,45, வீட்டில் வசிக்கிறார். நேற்றுமுன்தினம் நெடும்பாறையில் உள்ள கணவர் வீட்டுக்கு, தாய் தங்கமணியுடன் நந்தினி வந்தார். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ரவி, அரிவாளால் தங்கமணி கையை வெட்டினார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவியை கைது செய்து விசாரிக்கின்றனர். போலீசார் கூறியதாவது: நந்தினிக்கு கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்தது. ஆறு வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த நந்தினி, தாயாருடன் வசித்து வந்தார். கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் கள் இறக்கும் தொழிலாளியான ரவியை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், நந்தினியின் தாய் தங்கமணி கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், கோவை சுந்தராபுரத்துக்கு குடிபெயர்ந்தார். கடந்த வாரம், நந்தினிக்கும், ரவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால், கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். நேற்றுமுன்தினம், நெடும்பாறையில் உள்ள வீட்டில் தனது ஆடைகளை எடுத்து செல்ல தாயுடன் வந்தார். அப்போது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த ரவி, அரிவாளால் தங்கமணியின் வலது கையை வெட்டினார். அதில், அவரது கை துண்டானது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரவியை கைது செய்து விசாரிக்கிறோம். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி