தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு கருத்து கேட்பு நடத்த வலியுறுத்தல்
கோவை: வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்கு, மொத்த காய்கறி மற்றும் பழ மார்க்கெட் மற்றும் லாரிப்பேட்டையை மாற்றுவது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு நிர்வாகிகள், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கொடுத்த கடிதத்தில், '21 ஆண்டுகளாக கடுமையான சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களின் கோரிக்கையான, வெள்ளலுார் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்பது நிராகரிக்கப்பட்டிருக்கிறது.இது, இங்கு வசிக்கும் பல லட்சம் மக்களை,பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் நிலைய பயன்பாட்டை மாற்றி, புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தும் முன், பொதுமக்களின் கருத்தை கேட்பது மிகவும் அவசியம்.'குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்கிற,தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டும். மார்க்கெட் மற்றும் லாரிப்பேட்டையை மாற்றும் முடிவை கைவிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை,உடனடியாக துவக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.