வரி விதிப்பை முறைப்படுத்த நகராட்சி சார்பில் சிறப்பு முகாம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரிகளை அபராதம் இன்றி முறைப்படுத்திக்கொள்ள இறுதி வாய்ப்பாக சிறப்பு முகாம் இன்று முதல், 3ம் தேதி வரை நடக்கிறது.பொள்ளாச்சி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யாமலும், குடியிருப்பு வரி செலுத்திக் கொண்டு வணிக செயல்பாடுகள் செய்து கொண்டும், பெரிய கட்டடங்கள் இருந்த போதிலும் குறைந்த அளவே வரி செலுத்தியும் சிலர் நகராட்சிக்கு தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.இவர்கள் தாங்களாகவே முன்வந்து முழுமையான மற்றும் முறையான வரியை விதித்துக்கொள்ள, கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இறுதி வாய்ப்பாக சிறப்பு முகாம் நடக்கிறது.நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சியில் அதிகளவு சொத்து வரி நிலுவை இருப்பதால், ஒவ்வொரு வார்டுக்கும் தனியாக குழு அமைத்து வசூல் செய்யப்படுகிறது. இதுவரை தங்களது கட்டடத்துக்கு வரி விதிக்காதவர்கள் மற்றும் குறைந்த அளவு கட்டடத்துக்கு மட்டுமே வரி விதித்தவர்கள் மற்றும் வணிக பயன்பாடாக பயன்படுத்திக்கொண்டு வீட்டு வரி செலுத்தி வரி ஏய்ப்பு செய்வோருக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.இன்று முதல் வரும், 3ம் தேதி முதல் நகராட்சி அலுவலகம் மற்றும் வரி வசூல் மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. உரிய ஆவணங்களை ஒப்படைத்து புதிதாக வரி விதித்து கொள்ள வேண்டும். இந்த முகாமினை பயன்படுத்தி வரி இனங்களை அபராதமின்றி விதித்துகொள்ளவும், முறைப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.