உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெளிமாநில மாணவர்களுக்கு அரசு பள்ளியில் சிறப்பு பயிற்சி

வெளிமாநில மாணவர்களுக்கு அரசு பள்ளியில் சிறப்பு பயிற்சி

மேட்டுப்பாளையம்; கோவை காரமடை கல்வி வட்டாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 43 வெளிமாநில மாணவ, மாணவிகள் கணடறியப்பட்டு, அவர்களுக்கு ஆசிரியர்கள் வாயிலாக ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது.அவர்களும் ஆர்வமுடன் தமிழ் கற்று சரளமாக பேசியும், படித்தும் வருவதாக ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர்.காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் 144 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த கல்வி ஆண்டில் வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் அருகில் உள்ள கேரள, ஆந்திர உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த 43 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியை கற்றுத் தருவதுடன், நன்கு படிக்கும் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது.இதுகுறித்து, காரமடை வட்டார வள மைய ஆசிரியர் மற்றும் பயிற்றுநர் சுரேஷ் கூறியதாவது:-மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பகுதிகளில், அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்காக வீடு வீடாக ஆசிரியர்கள் சென்றனர். அப்போது, வெளிமாநில குழந்தைகளை கண்டறிந்து, அவர்களது பெற்றோர்களிடம் தமிழக அரசின் திட்டங்களும், கல்விக்கான கட்டணங்கள் எதுவும் இல்லை எனவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடுத்து கூறி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்தனர். 43 வெளிமாநில குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக அரசு பள்ளிகளுக்கு வரும் வெளிமாநில குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் வாயிலாக, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு, அதன் பின் ரெகுலர் வகுப்புகளுக்கு அனுப்பப்படுகின்றனர். பல குழந்தைகள் தமிழ் மொழியை ஆர்வமாக கற்கின்றனர். வெளிமாநில குழந்தைகளின் கல்வி எந்த விதத்திலும் தடைப்படாமல் இருக்க, தொடர்ந்து அவர்கள் படிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.காரமடை கல்வி வட்டாரத்தில் இந்த கல்வியாண்டில் பிற மாவட்டங்களில் இருந்தும் 116 மாணவ, மாணவிகள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதே போல் 10ம் மற்றும் 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகளில் 397 பேர் உயர்கல்வி படிக்கவில்லை என கண்டறியப்பட்டு, சிறப்பு முகாம் நடத்தி அவர்களை கல்லுாரி , டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக தாசில்தார், துணை தாசில்தார் போன்ற அதிகாரிகள் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு அவர்களின் படிப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை