உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வேகம் குறைப்பு; தாமதமாகும் புறநகர் பஸ்கள் தயங்கும் டிரைவர், கண்டக்டர்கள்

 வேகம் குறைப்பு; தாமதமாகும் புறநகர் பஸ்கள் தயங்கும் டிரைவர், கண்டக்டர்கள்

பொள்ளாச்சி: அரசு பஸ்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளதால், தொலைதுார ஊர்களுக்கான பஸ்களை இயக்க, டிவைர்கள், கண்டக்டர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. விபத்து தவிர்க்கவும், டீசல் மிச்சப்படுத்தும் வகையிலும் பஸ்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, புறநகர் பஸ்களில் அதிகபட்சம் 80 கி.மீ., என இருந்த வேகம், 70 கி.மீ., எனவும், டவுன் பஸ்களில், 60 கி.மீ.,ல் இருந்து, 50 கி.மீ., எனவும் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்களை இயக்க டிரைவர்கள், கண்டக்டர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அவ்வகையில், பொள்ளாச்சி பணிமனை 1ல், இருந்து, கோவை மார்க்கமாக புதுக்கோட்டை செல்லும் பஸ், டிரைவர், கண்டக்டர் இல்லாமல் 'செட் அவுட்' செய்யப்படவில்லை. இது குறித்து டிரைவர்கள், கண்டக்டர்கள் கூறியதாவது: பொள்ளாச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பஸ், கோவை வழியாக இயக்கப்படும். அதன்படி, பொள்ளாச்சியில் மாலை, 6:55 மணிக்கு புறப்படும் பஸ், கோவை உக்கடம் சென்று, சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் சென்று நிற்கும். அங்கிருந்து, 10:10 மணிக்கு புறப்படும் பஸ், 4:50 மணிக்கு புதுக்கோட்டை சென்றடையும். புதுக்கோட்டையில் இருந்து, காலை, 8:26 மணிக்கு கிளம்பி, திருச்சிக்கு 9:45 மணிக்கு சென்று, 9:50 மணிக்கு புறப்பட்டு கரூர் சென்றடையும். அங்கு, பகல் 12:20 மணிக்கு புறப்பட்டு, மாலை, 3:00 மணிக்கு கோவை சிங்காநல்லுார் வந்தடைய வேண்டும். தற்போது, பஸ்சின் வேகம் குறைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு ஊருக்கும் அரைமணி நேரம் காலதாமதமாக செல்ல வேண்டியுள்ளது. இந்த பஸ், தினமும் 656 கி.மீ., துாரம் இயக்கப்படும் நிலையில், டிரைவர், கண்டக்டருக்கு ஓய்வு எடுக்கவும் முடியாது. இதுபோலவே, பிற புறநகர் பஸ்களின் நிலை உள்ளது. வேகக் கட்டுப்பாட்டை தளர்த்தினால் மட்டுமே டிரைவர்கள், கண்டக்டர்கள் திருப்தியாக பணியில் கவனம் செலுத்த முடியும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை