உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோயில் பணி விறுவிறு

ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோயில் பணி விறுவிறு

கோவை, ; கோவை இஸ்கானில்' புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருக்கோயில் பணிகளை, வரும் 2026க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை இஸ்கானில் உள்ள கோயில், 2001ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. புதிய கோயிலுக்கான பூமி பூஜை 2019ல் துவங்கியது. தரை தளம் 20 ஆயிரம் சதுரடி, முதல் தளம், 30 ஆயிரம் சதுரடி, இரண்டாவது தளம் 10 ஆயிரம் சதுரடி என, 60 ஆயிரம் சதுரடியில் கட்டப்பட்டு வருகின்றன. ஐந்து கோபுரங்கள், 40 அடி அகலம், 24 அடி உயரம் கொண்ட அகண்ட கர்ப்பக் கிரகம் அமைக்கப்படுகிறது. இதில், ஜெகநாதர், பலராமர், சுபத்ரா தேவி மற்றும் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணன் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளனர். கருவறையின் மேல் பகுதியில் கோபுரம் உள்ளது. இக்கோபுரத்தில், 14 அடி விட்டம் கொண்ட தங்கமுலாம் பூசப்பட்ட, ஒரு டன் எடை கொண்ட சுதர்சன சக்கரம், வரும் 15ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தரைதளத்தில், பொதுமக்களுக்கு ஆன்மிக போதனைகள், சிறுவர்களுக்கு ஆன்மிக நாட்டத்தின் அவசியம் குறித்து அறிவுரைகளை வழங்கும் வகையில், கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயில் உட்புறம் 144 துாண்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், பல துாண்களில் பாகவத ஸ்லோகங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தளத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் புகைப்பட கண்காட்சி, முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும் போது, பொதுமக்கள் அமர்ந்து பார்வையிட போதிய வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இதனருகில், ஆயுள் சந்தாதாரர்கள் தங்கும் வகையில் தங்கும் விடுதி, உணவு விடுதி, 1,200க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில், திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகின்றன. நிர்வாகிகள் கூறுகையில், 'திருக்கோயில் பணிகளை, 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இங்கு வரும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆன்மிக அனுபவத்தை தரும் என்று உறுதியாக சொல்ல முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ