கபடிக்கு உத்வேகம் தரும் ஸ்டார் அகாடமி; தினமும் நடக்கிறது தீவிர பயிற்சி
கோவை; கோவையில் கபடி வீரர், வீராங்கனைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக பயிற்சி அளிக்கும் விதமாக துவங்கப்பட்டுள்ள, 'ஸ்டார் அகாடமி'யில், 40 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 'ஓபன்' போட்டிகளுக்கு, அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.கோவையில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து போட்டிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதேசமயம், வீர விளையாட்டான கபடிக்கு போதுமான வசதிகள் இல்லாததால், அவர்கள் ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி மைதானத்தில், பயிற்சி எடுத்து வருகின்றனர். கபடியை பொறுத்தவரை மாவட்டத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்ட அணிகள் 'ஓபன்' போட்டிகளில் விளையாடிவருகின்றன.தவிர, மாணவ, மாணவியரையும் தேர்வு செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்.டி.ஏ.டி.,) பயிற்சி வழங்கி வருகிறது. இச்சூழலில், கபடிக்கு முறையாக பயிற்சி அளிக்க, எஸ்.டி.ஏ.டி., சார்பில் 'ஸ்டார் அகாடமி' அமைக்க முடிவு செய்யப்பட்டு, கோவை, ஈரோடு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.அதன்படி, கோவை நேரு ஸ்டேடியத்தில் இப்பயிற்சி அகாடமி அமைக்கப்பட்டு தனி பயிற்சியாளரும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அகாடமியில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டி, சமீபத்தில் நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இத்தேர்வில், தனித்திறமை அடிப்படையில் வீரர், வீராங்கனைகள் தலா, 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.கடந்த ஒரு வாரமாக, இவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாதத்தில், 25 நாட்களுக்கு தொடர் பயிற்சி வழங்கப்படும். சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள், சீருடை வழங்கப்படும்.இம்மையத்தால் நிறைய வீரர், வீராங்கனைகளை உருவாக்க முடியும் என்பதுடன் தேசிய, சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்கவும், இது உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 'செமி இன்டோர்' தேவை அரசுக்கு வேண்டுகோள்
மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரியிடம் கேட்டபோது,''தற்போது, ஆண்கள், பெண்கள் தலா, 20 பேர் தேர்வு செய்யப்பட்டு மாநகராட்சி மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஓராண்டு வரை பயிற்சி பெறுவர். இடைப்பட்ட காலத்தில் வெளியே நடக்கும் 'ஓபன்' கபடி போட்டிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.அவர்களுக்கு தேவையான பயண செலவு, விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படும். அதேபோல், ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி மைதானத்தில் பிரத்யேகமாக கபடி பயிற்சிக்கு இடம் கோரி மாநகராட்சியிடம் முறையிட்டுள்ளோம்.''கபடிக்கென்று 'செமி இன்டோர்' அமைத்து தருமாறு, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம்,'' என்றார்.