உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனவிலங்குகளை தடுக்கும் உருக்கு கம்பி வேலி: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கோவையில் ஆய்வு

வனவிலங்குகளை தடுக்கும் உருக்கு கம்பி வேலி: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கோவையில் ஆய்வு

கோவை: கோவையில், உருக்கு கம்பி வேலி அமைக்கும் இடங்களை, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட குப்பேபாளையம், ஆதிநாராயணன் கோவில் அருகே உருக்கு கம்பி வேலி அமைக்கும் இடத்தில் ஆய்வு செய்தனர். வேலி அமைப்பதற்கான அவசியத்தை அவர்கள் கேட்டனர். அதற்கு, 'உருக்கு கம்பி வேலி எவ்வாறு அமைக்கப்பட உள்ளது. இந்த கம்பி வேலிகளால் வனவிலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஒசூரில் அமைக்கப்பட்டுள்ள உருக்கு கம்பி வேலி மூலம் தெரியவந்துள்ளது. காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதால், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் எடுத்துரைத்தார். ஒசூரில் அமைக்கப்பட்ட உருக்கு கம்பி வேலியால், காட்டு யானைகள் தடுக்கப்பட்டது தொடர்பான வீடியோவையும், நீதிபதிகளுக்கு காட்டினார். காட்டு யானைகள் ஊடுருவலால், 15 ஆண்டுகளாக ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் மற்றும் காட்டு யானையை ஊருக்குள் புகாமல் தடுக்க வேண்டியது குறித்து விவசாயிகள் மனு கொடுத்தனர். கனிம கொள்ளை ஆய்வு அதன்பின், பேரூர் தாலுகா, வெள்ளெருக்கம்பாளையத்தில், பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக கனிம வளம் வெட்டி எடுப்பட்ட இடத்தையும், நீதிபதிகள் நேரில் பார்வையிட்டனர். 'அனுமதியின்றி கனிம வளங்கள் எடுத்துச் சென்றால், உடனுக்குடன் வழக்கு பதிந்து, லாரிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. மண் கடத்தலை தடுக்க கோவை மாவட்டம் முழுவதும் கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார். அங்கிருந்து, ட்ரோன் கேமரா பறக்க விட்டு, சுற்றுப்பகுதியில், தற்போது மண் எடுக்கப்படுகிறதா, விவசாய நிலங்கள் எவ்வாறு உள்ளன என்பதை, நேரடியாக ட்ரோன் வீடியோ மூலம் நீதிபதிகள் பார்வையிட்டனர். ஆய்வை முடித்து விட்டு, கோவையில் உள்ள ஐகோர்ட் விருந்தினர் மாளிகைக்கு நீதிபதிகள் சென்றனர். வனத்துறை, வருவாய்த்துறை, போலீசார் உடனிருந்தனர். இன்று (செப்., 6) வனத்துறை அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில், நீதிபதிகள் பங்கேற்கின்றனர். மேட்டுப்பாளையம் முன்னதாக நேற்றுக்காலை ஐகோர்ட்டு நீதிபதிகள் மேட்டுப்பாளையம் அருகேஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட வினோபாஜி நகரில் ஆய்வு செய்து, பொது மக்களிடம் யானைகள் நடமாட்டம் குறித்து கேட்டனர். பின்பு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தோண்டி இருந்த அகழியை மூட வேண்டும் என கோர்ட் அறிவித்திருந்தது. அந்த அகழி முழுமையாக மூடப்பட்டுள்ளதா, என நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பின்பு நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் குழுவினர், கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளிக்கு சென்றனர். அங்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் ராமசாமி, செயலர் கவிதாசன் ஆகியோர் நீதிபதிகளை வரவேற்றனர். பள்ளி காம்பவுண்ட் சுவருக்கும், வன எல்லைக்கும் இடையே உள்ள பகுதிகளை காண்பித்தனர். தோட்டக்கலைப் பண்ணைக்கு வந்த நீதிபதிகளிடம் கல்லாறு பழப்பண்ணை நூறாண்டுகளுக்கு மேலான பழமையான பண்ணையாகும். இந்த பழப்பண்ணையை தொடர்ந்து இயக்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என, நீதிபதிகளிடம், எம்.எல்.ஏ., செல்வராஜ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை