அங்கன்வாடிகளில் முன்பருவ கல்வி சான்று மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை
பொள்ளாச்சி : அங்கன்வாடிகளில், ஐந்து வயது பூர்த்தியாகி தொடக்கப் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கப்படுவதால், இடை நிற்றலை குறைக்க முடிகிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 106 அங்கன்வாடி மையங்களில், 1,775 குழந்தைகள், தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 99 அங்கன்வாடிமைங்களில், 1,750 குழந்தைகளும் முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர்.கல்வியை பொறுத்தமட்டில், வளர்ச்சி செயல்பாடு கண்டறியப்படுகிறது. அதாவது, 2 முதல் 3, 3 முதல் 4 மற்றும், 4 முதல் 5 என, வயது வாரியாக, மூளை, மனம், சமூகம், அறிவு மற்றும் மொழி வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது.அதிலும், குழந்தைகளின் திறமை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை, மூன்று ஆண்டுகளுக்கு ஆய்வு அட்டையில் பதிவு செய்யப்படுகிறது.இதையடுத்து, ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி, குழந்தைகளை அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து நிலை, கற்றல் திறன் மற்றும் சுகாதார நிலை ஆகியவை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது.இந்த ஆய்வின் வாயிலாக, குழந்தைகளின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பிரச்னைகள் இருந்தால், அவற்றை கண்டறிந்து உரிய உதவிகளை வழங்க முடிகிறது.அதேபோல, ஐந்து வயது பூர்த்தியாகி தொடக்கப்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும்.இதன் வாயிலாக, அங்கன்வாடி மையங்கள் மறறும் தொடக்கப்பள்ளிகளில், குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை குறைக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினார்.