நிலத்தடிநீரை ரீசார்ஜ் செய்ய நடவடிக்கை; கோவை கலெக்டர் தகவல்
பொள்ளாச்சி; ''கோவை மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, கோவை கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார்.பொள்ளாச்சி அருகே, குரும்பாபாளையத்தில் நாற்றங்கால் பண்ணையில் பூவரசன், வேம்பு, தேக்கு உள்ளிட்ட, 4,745 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுவதை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, நடுநிலைப்பள்ளிக்கு சென்று மாணவர்கள் எண்ணிக்கை, கற்றல் திறன், வாசிப்பு குறித்து ஆய்வு செய்தார்.தொடக்கப்பள்ளியில், 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பதை பார்வையிட்டார்.இதேபோன்று, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு, தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.மாவட்ட கலெக்டர் கூறியதாவது:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் பார்வையிடப்பட்டது.கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அங்கன்வாடி மைய கட்டடங்கள் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன.செயல்பாட்டில் இல்லாததை சரி செய்தல், புதியதாக மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல் தொடர்பாக, மார்ச் மாதத்தில் இருந்து ஆய்வு செய்யப்படுகிறது.அதன் அடிப்படையில், 800க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டு வருகின்றன.அரசுக்கு சொந்தமான நிலங்களில், மழைநீர் சேமித்து, நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்யும் இடமாக மாற்றப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.இவ்வாறு, கூறினார்.