குடிநீர் குழாயில் கற்குவியல்
மேட்டுப்பாளையம்; பெள்ளாதி ஊராட்சியில் குடிநீர் குழாய்களை சீரமைத்த போது, உள்ளே இருந்த கற்குவியல் அகற்றப்பட்டது.காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெள்ளாதி ஊராட்சியில்,கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் குறைவாக வந்ததால், பத்திலிருந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வினியோகம் நடைபெற்றது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இது குறித்து பெள்ளாதி ஊராட்சி முன்னாள் தலைவர் பூபதிகுமரேசன் கூறியதாவது:குடிநீர் குழாயை கழற்றிப் பார்த்த போது, அதிர்ச்சி அளித்தது. குழாயின் உள்ளே அதிக அளவில் கற்குவியல் இருந்தது. இதனால் தொட்டிக்கு வரும் குடிநீர் குறைந்தது தெரியவந்தது. கடந்த இரண்டு மாதங்களாக அன்னூர் சாலை விரிவாக்கம் செய்ய, மரங்களை வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. உடைப்புகளை சீர் செய்யும் போது, குழாயில் இருந்த கற்களை, சரியாக அகற்றாமல் அப்படியே சரி செய்துள்ளனர். நிலமட்ட தொட்டியில் குடிநீர் ஊற்றும் குழாயில், அனைத்து கற்களும் குவியலாக சேர்ந்துள்ளது. இதனால் தொட்டிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால், மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. கற்குவியலை அகற்றிய பின்பு, தண்ணீர் தற்போது சீராக வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.