பதில் சொல்லி பரிசை வெல்ல மாணவர்கள் ஆர்வம்
பொள்ளாச்சி; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டி பொள்ளாச்சி ரைஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை, 'பட்டம்' இதழ் தினமும் பள்ளிகளில் கிடைக்கும். இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை விரிவுப்படுத்தும் வகையிலும், 2018 முதல், 'வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், பொள்ளாச்சி அருகே திம்மங்குத்து சாமியாண்டிபுதுார் ரைஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ - ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.நேற்று பள்ளியில் நடந்த வினாடி - வினா போட்டியில், 70 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேரை, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.மூன்று கட்டங்களாக நடந்த இப்போட்டியில், முதல் பரிசை, 'ஜி' அணியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவர்கள் கவின், சஞ்சய் ஆகியோர் வென்றனர்.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை செயல் இயக்குனர் ஹிட்டாஷி கே ஷா, நிர்வாக அலுவலர் அருணா, முதல்வர் ஜோதிலட்சுமி, பள்ளி ஆசிரியர்கள் பட்டீஸ்வரி, மதீனா, அருண்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும். தகவல் பெட்டகம்
பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி கூறியதாவது:'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ், இலக்கியம் முதல் அறிவியல் உள்ளிட்ட பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. அதில், அரிய வகை தகவல்கள் அடங்கிய பெட்டகமாக பட்டம் இதழ் உள்ளது. 'பட்டம்' இதழில் உள்ள தகவல்களை படித்து தெரிந்து கொள்வதுடன், மாணவர்கள் திறமையை மேம்படுத்த உதவியாக உள்ளது.மொத்தத்தில் அனைத்து தரப்பினரும் படிக்க கூடிய ஒரு நல்ல இதழாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
போட்டியில் வெல்வதே இலக்கு!
மாணவன் கவின்: 'பட்டம்' இதழ் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், தினமும் ஆர்வமுடன் படிக்கிறேன். இதனால், வகுப்புகளில் பாடங்களை புரிந்து படிக்க முடிகிறது. முதல் பக்கம் முதல், கடைசி பக்கம் வரை அனைத்து தகவல்களையும் படிப்பதால், வினாடி -- வினா போன்ற போட்டிகளில் பங்கேற்க உதவியாக இருந்தது. இந்த போட்டியில் வென்றது போல, இறுதி போட்டியிலும் வெல்ல முயற்சிகளை மேற்கொள்வேன்.மாணவன் சஞ்சய்: 'தினமலர் - பட்டம்' இதழில், வரும் தகவல்கள் ஒவ்வொன்றையும் ஆர்வமாக படிக்க துாண்டுகிறது. அனைத்து தகவல்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இதனால், வாசிப்பு திறனும் மேலோங்கியுள்ளது. இந்த இதழ் படிப்பதால் பொது அறிவை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. வினாடி - வினா இறுதி போட்டியில் வெல்வதை இலக்காக கொண்டு முயற்சி மேற்கொள்வேன்.