உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பதில் சொல்லி பரிசை வெல்ல மாணவர்கள் துடிப்பு: விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டம் இதழ் சார்பில் வினாடி--வினா போட்டி

பதில் சொல்லி பரிசை வெல்ல மாணவர்கள் துடிப்பு: விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டம் இதழ் சார்பில் வினாடி--வினா போட்டி

பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் பரிசை வெல்' மெகா வினாடி - வினா போட்டி, விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. மாணவர்களின் கற்றல் ஆர்வம் மற்றும் நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி - -வினா போட்டிகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி- - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணியினர், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப் போட்டியில் பங்கேற்பர். பொள்ளாச்சி விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 150 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளி அளவில் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'ஏ' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற 6ம் வகுப்பு மாணவர்கள் சூர்யா, ஜெபின் லாசரஸ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜாய், ஒருங்கிணைப்பாளர் உமாசங்கரி, செயலாளர் ஆனந்த், ஆசிரியர் உதயராணி ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பொது அறிவு பெட்டகம் முதல்வர் ஜாய் கூறுகையில், ''பட்டம் இதழ், அனைத்து தரப்பினரும் படித்து பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. கல்வி, அறிவியல், பொது அறிவு என, பலதரப்பட்ட செய்திகள் இடம்பெறுவதால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும். 'பட்டம்' இதழை தொடர்ந்து படிக்கும் மாணவ, மாணவியர் கற்றல் சார்ந்த தேடல்களை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலான தகவல்களும் 'பட்டம்' இதழில் உள்ளன. எனவே, மாணவ, மாணவியரின் பொது அறிவு பெட்டகம் 'பட்டம்' இதழ் மட்டுமே.

ஆர்வத்தை துாண்டுகிறது!

மாணவர் சூர்யா: மாணவர்களின் அறிவுத் தேடலை பூர்த்தி செய்யும் வகையில் தினமலர் நாளிதழின் 'பட்டம்' இதழ் உள்ளது. பட்டம் இதழில், கற்கும் ஒவ்வொரு விஷயம் சார்ந்தும், விசாலமான அறிவை பெற்றுக் கொள்ள முடியும். அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை துாண்டுகிறது. இதன் காரணமாகவே, தொடர்ந்து 'பட்டம்' இதழை படித்து வருகிறேன். இதனையே கருவியாகப் பயன்படுத்தி இறுதிபோட்டியிலும் வென்று சாதிப்போம். மாணவர் ஜெபின் லாசரஸ்: 'பட்டம்' இதழை தொடர்ந்து படித்து வந்ததால், வினாடி - வினாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பட்டென பதில் சொல்ல முடிந்தது. அதிகப்படியான தகவல்களை உள்ளடக்கிய விஷயங்களை தெரிந்து கொள்ள 'பட்டம்' இதழ் பெரிதும் உதவுகிறது. இந்த இதழை படிப்பதால், பாடம் சார்ந்த விஷயங்களை படிப்பது எளிதாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !