விளையாட்டு விழாவில் மாணவர்கள் உற்சாகம்
கோவை; உப்பிலிபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளியில் ஏழாம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மணிமேகலை, நிர்வாக செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் நடராசன் கலந்து கொண்டார். விளையாட்டின் முக்கியத்துவம், விடாமுயற்சியுடன் இலக்கை அடைவது குறித்து அவர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார். பள்ளி தேசிய மாணவர் படை, இசைக்குழு மற்றும் பள்ளியின் கிரிடேசியஸ், கேலபாகஸ், டிரயாசிக், பெர்மியன் என்னும் நான்கு அணியைச் சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டி முடிவில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தினை கேலபாகஸ் அணி வென்றது.