உடைந்த மின்கம்பங்களால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து
மேட்டுப்பாளையம் : உடைந்த மின் கம்பங்களால், பள்ளி மாணவர்களின் உயிருக்கு, ஆபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. காரமடை நகராட்சி பத்தாவது வார்டில், பொன்னம்மாள் கார்டன் உள்ளது. எம்.கே.கே., லே அவுட்டில் இருந்து, எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி கிழக்கு பகுதி காம்பவுண்டு வழியாக, பொன்னம்மாள் கார்டனுக்கு செல்ல சாலை உள்ளது. இந்த சாலை வழியாக நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன், இச்சாலையில் இருந்த நான்கு மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. உடைந்த இரண்டு இரும்பு மின் கம்பங்கள், இரண்டு சிமெண்ட் மின் கம்பங்கள், சாலையின் ஓரத்தில் போட்டனர். இதில் இரண்டு மின் கம்பங்கள் உடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஒரு இரும்பு கம்பம் வளைந்து நிலையில், நீட்டிக் கொண்டு உள்ளது.இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தவறி கீழே கிடக்கும் மின் கம்பங்கள் மீது விழுந்தால், அவர்களின்உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடைந்த இந்த மின் கம்பங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.