உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏதேனும் ஒரு போட்டியில் மாணவர்கள் பங்கேற்கணும்! தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

ஏதேனும் ஒரு போட்டியில் மாணவர்கள் பங்கேற்கணும்! தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

பொள்ளாச்சி; மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்த, கடந்த மூன்று ஆண்டுகளாக, அரசுப் பள்ளிகளில், கலைத்திருவிழா போட்டி நடத்தப்படுகிறது. வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு, வெற்றி பெறுவோருக்கு 'கலையரசன்', 'கலையரசி' பட்டம் வழங்கி, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அவ்வகையில், நடப்பு கல்வியாண்டில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 1 முதல் 12ம் வகுப்பு பயிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐந்து பிரிவுகளில், 'பசுமையும் பாரம்பரியமும்' என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக, கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சுப் போட்டி, பரதநாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போது, பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில், அனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒரு போட்டியில் பங்கேற்கச் செய்யும் வகையில் ஆசிரியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டு, ஒவ்வொரு மாணவரும், ஏதேனும் ஒரு போட்டியில் பங்கேற்க செய்ய வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப பள்ளிகள்தோறும், எந்தவொரு மாணவரும் விடுபடாமல் போட்டியில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கலைத்திருவிழா போட்டியில் அனைத்து மாணவ, மணவியரின் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், குறுவட்டம், வட்டாரம், மாவட்டம் அளவில் தகுதிபெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர். வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி