தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி; மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
சூலுார்; தேசிய திறனாய்வு தேர்வில் வென்ற சூலுார் வட்டாரத்தை சேர்ந்த, 39 மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வு தேர்வில், கோவை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக, சூலுார் வட்டாரத்தை சேர்ந்த, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த, 39 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று அசத்தினர். மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழிகாட்டுதலை வழங்கிய சூலுார் வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா சூலுாரில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் (தொடக்க கல்வி), மாணவர்களுக்கு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். பயிற்சி அளித்த ஆசிரியர்களை பாராட்டினார்.வட்டார கல்வி அலுவலர்கள் தமிழ்செல்வி, தன்னாசி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ( பொறுப்பு) முத்தமிழன், தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.