வட்டார அளவிலான கலைத்திருவிழா நிறைவு மாவட்டப்போட்டிக்கு தயாராகும் மாணவர்கள்.
உடுமலை,; பள்ளி மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது.இசை, நடனம், பேச்சு, எழுத்துத்திறன், கைவினைப்பொருட்கள் வடிவமைத்தல் உட்பட பல திறமைகளை கொண்ட மாணவர்களை ஊக்குவிப்பாகவும் இவ்விழா உள்ளது.முதற்கட்டமாக பள்ளிகளில் நடத்தப்பட்டு, அடுத்து வட்டார அளவிலும், இறுதியில் மாநில அளவிலும் நடக்கிறது.உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தது.உடுமலையில் நேற்று 6,7,8 வகுப்புகளுக்கான நடனப்போட்டிகள் எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.குடிமங்கலம் வட்டாரத்தில் சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன.கருவி இசைப்போட்டியில் தோல் கருவி, துளை, காற்று கருவிகள், தந்திக்கருவிகள் வாசித்தல், நடனத்தில் நாட்டுபுற நடனம், தனி மற்றும் குழு நடனம், பரதநாட்டியம், நாடகத்தில் தெருகூத்து, வீதி நாடகம், தனிநபர் நடிப்பு, பல குரல் பேச்சு, இலக்கிய நாடகம், பாவனை நடிப்பு, பொம்மலாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.