மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் கண்டறியும் திட்டம் குறித்து ஆய்வு
கோவை: கோவையில் கடந்த ஓராண்டாக நடைமுறையில் உள்ள, மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் கண்டறியும் பைலட் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, ஜைகா., அமைப்பு ஒருங்கிணைப்பாளர் அகீக்கோ, நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தின் கீழ், மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் ஆரம்ப நிலை அறிகுறிகள் குறித்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அறிகுறி உள்ளவர்களை, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைப்பார்கள். அங்கு, பரிசோதனை செய்து புற்றுநோய் இருப்பது உறுதியானால் சிகிச்சை துவக்கப்படும். இப்பைலட் திட்டம் வரும் ஜன., மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இத்திட்ட செயல்பாடுகள் குறித்து, நேற்று அரசு மருத்துவமனையில் டீன் கீதாஞ்சலி தலைமையில், ஜைகா., திட்ட ஒருங்கிணைப்பாளர் அகீக்கோ, புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இத்திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் மில்லர் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து, சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திலும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அரசு மருத்துவமனை திட்ட ஒருங்கிணைப்பாளர்டாக்டர் செல்வராஜ் கூறுகையில், '' கடந்த ஓராண்டாக கோவை மாவட்டத்தில் பைலட் திட்டமாக மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் ஸ்கிரீனிங் நடைபெற்று வருகிறது. இதன் அறிக்கையை பொறுத்து, அதில் உள்ள நிறை, குறைகள் ஆய்வு செய்து பின்னர் பிற மாவட்டங்களுக்கு திட்டம் விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.