உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேற்கு புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க ஆய்வு

மேற்கு புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க ஆய்வு

கோவை; கோவை மேற்கு புறவழிச்சாலையில், சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்யப்படும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.கோவை, மதுக்கரை அருகே துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடியும் வகையில், 32.43 கி.மீ., தூரத்திற்கு, மேற்குபுறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, மதுக்கரை முதல் செல்லப்பகவுண்டனூர் பிரிவு வரை, 11.80 கி.மீ., தூரத்திற்கு சாலைப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள், உள்ளூர் இணைப்பு சாலைகளை பயன்படுத்த முடியாத வகையில், புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என, பேரூர் சுற்றுப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆகிய இரு தரப்பினருடனும், தெற்கு ஆர்.டி.ஓ., ராம்குமார் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. இதில், புறவழிச்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை மற்றும் உள்ளூர் இணைப்பு சாலைகளுக்கு செல்ல, அணுகு சாலை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜன், விவசாயிகளின் பாதிப்பு குறித்து, மீண்டும் ஒரு சில பகுதிகளில் கள ஆய்வு செய்து, கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை