உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அவசர காலங்களில் மருத்துவ வசதியின்றி அவதி! நிதி இருந்தும் இடவசதி இல்லாததால் அவலம்

 அவசர காலங்களில் மருத்துவ வசதியின்றி அவதி! நிதி இருந்தும் இடவசதி இல்லாததால் அவலம்

வார்டு விசிட்: 65

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 65வது வார்டு பாரதி நகரில் 1-6 வீதிகளும், அருணாச்சல தேவர் காலனியில் 1-4 வீதிகளும், அபிராமி நகர், ஸ்ரீ நகர், பார்க் டவுன், கருணாநிதி நகர், காமராஜர் நகர், சிவராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் வசிக்கின்றனர். வார்டின் கிழக்கே குறுகிய வீதிகள் அதிகமாகவும், மேற்கே அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் அதிகம் உள்ள பகுதியாகவும் உள்ளது. ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் ரோட்டில் இருந்து திருச்சி ரோடு, சுங்கம் பை-பாஸ் செல்வோர் இந்த வார்டுக்குட்பட்ட வழித்தடங்களை குறுக்கு வழியாக பயன்படுத்துகின்றனர்.இதனால், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக காணப்படுகிறது. மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள இந்த வார்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், அவசர காலங்களில் மருத்துவ சேவை கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சுங்கம் பைபாஸ் செல்லும் இந்திரா நகரில், 2012-13ம் ஆண்டு கட்டப்பட்ட மழைநீர் வடிகால் புதர்மண்டி கிடக்கிறது. மழை காலங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.

மருத்துவ வசதி வேண்டும்!

நல்ல தண்ணீர் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. குழாய் உடைப்பு ஏற்படும் சமயங்களில் சிரமங்களை சந்திக்கிறோம். இச்சூழலில், சிவராம் நகரில், 24 மணிநேர குடிநீர் திட்டத்தில் கட்டப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால், இங்குள்ளவர்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும். மருத்துவ தேவைக்காக டவுன்ஹால், சுங்கம் செல்ல வேண்டியுள்ளது. மருத்துவ வசதி அத்தியாவசிய மானது. -ராஜேந்திரன், ஆட்டோ டிரைவர்.

ரேஷன் வாங்க அலைச்சல்!

பாரதி நகர் இரண்டாவது வீதியில் உள்ள மின் கம்பம் மோசமான நிலையில் காணப்படுகிறது. அடிப்பகுதி மட்டுமின்றி மேல் பகுதியும் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழலாம். பல ஆண்டுகளாக மின் வாரியத்திடம் முறையிட்டும் பலனில்லை. இங்குள்ள மக்கள் தொகைக்கேற்ப ரேஷன் கடைகளை அதிகரிக்க வேண்டும். சிலர் 'இரட்டை புளியரம்' பகுதிக்கு சென்று ரேஷன் வாங்கி வரவேண்டியுள்ளது. வயதானவர்கள் அலையாது இருக்க அருகே ரேஷன் கடை அமைக்க வேண்டும். -வசந்தாமணி, இல்லத்தரசி.

பாதாள சாக்கடை பிரச்னை

பாதாள சாக்கடை அடைப்பு (யு.ஜி.டி.,) அடிக்கடி ஏற்படுவதால் வீடுகளுக்குள் கழிவுநீர் 'ரிவர்ஸ்' எடுக்கிறது. துர்நாற்றத்துக்குள் வசிக்கமுடிவதில்லை. வார்டு முழுவதும் இப்பிரச்னை உள்ளது. பொது மக்கள் குப்பை கழிவுகளை சாக்கடைக்குள் கொட்டுவதே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக, இங்கு வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் இந்த விஷயத்தில் அலட்சியம் காணப்படுகிறது. எனவே, பொறுப்புடன் செயல்பட வேண்டும். -நாகேஸ்வரி, இல்லத்தரசி.அடைப்பு அபாயம் பாரதி நகர்-2வது வீதியில் ரோடு மோசமாக உள்ளது. ரோடு குறுகியதாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். விடுபட்ட அருணாச்சல தேவர் காலனி பகுதிகளிலும் ரோடு அமைத்துத்தந்தால் உதவியாக இருக்கும். இப்பகுதியில் சாக்கடைகள் மீது பொருத்தப்பட்ட 'கான்கிரீட் ஸ்லாப்'கள் பல உடைந்து, வெளியே தெரியும் கம்பியால் விபத்து ஏற்படும் அவலம் உள்ளது. இவற்றை சரி செய்ய வேண்டும். இந்திரா நகரை கடக்கும் மழைநீர் வடிகால் துார்வாரப்படாததால் அடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. -ஸ்டே ன்லி பெலிக்ஸ், பேராசிரியர்.

குப்பை தொட்டியில்லாத வார்டு!

வார்டு கவுன்சிலர் (தி.மு.க.,) ராஜேஸ்வரி கூறியதாவது: வார்டுகளில் பெரும்பாலான வீதிகளில் தார் ரோடு, சிமென்ட் ரோடு போட்டு முடிக்கப்பட்டுவிட்டன. 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை இல்லாத நிலையில் நான் வந்தவுடன், 97 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. மீதமிருக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். அதேபோல், 24 மணிநேர குடிநீர் திட்ட பணிகளும் முடிந்துவிட்டன. இந்நிலையில், அருணாச்சலத்தேவர் காலனி, பாரதி நகர், 1, 2 வீதிகளில் சிமென்ட் ரோடு அமைக்கப்படுகிறது. விடுபட்ட வீதிகளில் ரோடு அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை அமைக்க நீண்டகாலமாக நடவடிக்கை எடுத்துவருகிறேன். நிதி இருந்தும், எனது வார்டில் 'ரிசர்வ் சைட்' எதுவும் இல்லாததால் கட்டடங்கள் கட்ட முடியவில்லை. இருப்பினும் இடம் தேடிவருகிறோம். சிவராம் நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, 95 சதவீதம் முடிந்துவிட்டது. பழைய இணைப்பில் குடிநீர் வினியோகிக்கப்படும் நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் தடையின்றி தண்ணீர் வழங்கப்படும். 'குப்பை தொட்டி' இல்லாத வார்டாக மாற்றியுள்ளேன். அந்த அளவுக்கு துாய்மை பணியாளர்கள் குப்பை மேலாண்மை செய்துவருகின்றனர். மழைநீர் வடிகால்களை ஏற்கனவே துார்வாரியுள்ளோம். விடுபட்ட இடங்களில் துார்வார நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடம் இருந்து ஏதேனும் கோரிக்கைகள் வந்தாலும் உடனுக் குடன் தீர்வுகண்டு வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ