உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்

கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில், கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி மற்றும் உலாந்தி வனச்சரகங்கள் உள்ளன. தேசிய புலிகள் ஆணையம் வழிகாட்டுதலின் படி ஆண்டுதோறும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகின்றன.அதன்படி, நடப்பாண்டுக்கான கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள், நேற்று துவங்கியது. இதற்கான பயிற்சி முகாம் அட்டக்கடி பயிற்சி மையத்தில் வனத்துறை அதிகாரிகள் வாயிலாக வனப்பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டன.தொடர்ந்து, நேற்று முதல் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டன. அதன்படி, நான்கு வனச்சரகங்களில், 32 சுற்றுகளாக, 62 நேர்கோட்டு பாதைகள் அமைத்து, மொத்தம், 186 களப்பணியாளர்கள் வாயிலாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.அதில், வனவிலங்குகளின் கால்தடம், எச்சம் மற்றும் நேரில் பார்த்த வனவிலங்குகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஜி.பி.எஸ்., கருவிகள் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. இப்பணி வரும், 17ம் தேதி வரை நடக்கிறது. கணக்கெடுப்பு புள்ளி விபரங்கள், தேசிய புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுமலை

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்துக்குட்பட்ட, உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்களில் கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.நான்கு வனச்சரகங்களும், 34 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு, அதில் 53 நேர்க்கோட்டு பாதைகள் தேர்வு செய்யப்பட்டு கணக்கெடுப்பு நடக்கிறது. நேற்று, புலி, சிறுத்தை, பிற ஊனுண்ணி மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. பின்னர், நேர்க்கோட்டு பாதையில், நேரடியாக தென்படும் இரை விலங்குகள், அதே பாதையில் திரும்பி வரும் போது, தாவர வகைகளையும், கணக்கெடுக்கின்றனர்.வரும் 14ம் தேதி முதல் இரை விலங்கு நேரடி கணக்கெடுப்பு, தாவரங்கள், வனத்துக்குள் மனித இடையூறுகள் குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை