சர்ப்ரைஸ் தந்த பசுமை தேசம் இனிக்க இனிக்க பயணம்
ச ந்தோஷத்தில் பெரிய சந்தோஷம், மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்க வேண்டும் என்பது சொல்வழக்கு. வாழ்க்கை இருப்பதால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை தாண்டி, அதில் எல்லோருக்கும் சந்தோஷம் நிறைந்திருக்கிறதா என்று பார்க்கும்போது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நெருக்கடிகள்.சின்ன, சின்ன சந்தோஷங்கள், அன்றைய நிமிடத்தை, அப்படியே போனால், ஒரு நாளை இனிமையாக கடத்தி விட முடியும். அப்படி ஒரு சந்தோஷத்தை, அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு, தீபாவளியன்று வழங்கினார்கள், பசுமை தேசம் அறக்கட்டளையினர்.அறக்கட்டளையினர், கடந்த 16 ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கோவையின் சுற்றுவட்டார பகுதிகளில், இதுவரை, ஒரு லட்சத்து 76 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்துள்ளனர். முத்தாய்ப்பாக, ஒவ்வொரு வருடமும், தீபாவளியன்று, அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு, இனிப்பு, காரம் வழங்கி வருகின்றனர். நடப்பாண்டும், உக்கடம், காந்திபுரம் பஸ் ஸ்டாண்களில், ஓட்டுநர், நடத்துனர்களுக்கு இனிப்பு, காரம் வழங்கினர்.'இப்பவே கிளம்புனா தா, சரியான நேரத்துக்கு போக முடியும்' என்று டிரைவர் சொல்லிக் கொண்டிருக்க... 'என்னங்க... படியில நின்னுட்டு இருந்தா எப்படி... கொஞ்சம் உள்ளே போங்க...' என்று, நடந்துனரும் பயணிகளை பஸ்சுக்குள் அனுப்பிக் கொண்டிருக்க, அறக்கட்டளை நிறுவனத்தினர் இவர்களிடம் இனிப்பு, காரம் வழங்கியவுடன், அப்போதைக்கு இருந்த, ஓட்டுநர், நடத்துனர் சூழ்நிலை அப்படியே மாறிப்போனது.நிறுவனர் ராஜேந்திரன், ரித்திக், அஸ்வின், பிரதீப், திவாகர், தரணிதரன், பிரஜீத் ஆகியோர் பங்கேற்று வழங்கியது, அங்கிருந்த மக்களை புருவம் உயர்த்த வைத்தது. பயணிகளை ஏற்றிச் செல்லும் தருவாயில், இவர்கள் அளித்த இன்ப அதிர்ச்சி, ஒரு நிமிடம், ஓட்டுநர், நடத்துனர்கள் முகத்தில், சந்தோஷத்தை ஏற்படுத்தியது.