உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நவீன பாரதத்தை படைத்தவர் சுவாமி விவேகானந்தர்

நவீன பாரதத்தை படைத்தவர் சுவாமி விவேகானந்தர்

சூலுார்; நாட்டின் விடுதலை போராட்ட உணர்வுகளுக்கு உத்வேகம் அளித்து, நவீன பாரதம் உருவாக காரணமாக இருந்தவர் சுவாமி விவேகானந்தர், என, விழிப்புணர்வு சொற்பொழிவில், மனித வள மேலாண்மை பயிற்சியாளர் பொன். அண்ணாதுரை பேசினார்.முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கத்தின் சார்பில் மாதாந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு மு.க.புதூரில் நடந்தது. இயக்கதலைவர் சம்பத்குமார் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.'சுவாமி விவேகானந்தர் பன்முக வழிகாட்டி' என்ற தலைப்பில், மனித வள மேலாண்மை பயிற்சியாளர் பொன். அண்ணாதுரை பேசியதாவது:சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளின் தாக்கம் இல்லாத இடமோ, துறையோ இல்லை. அவரது சிக்காகோ எழுச்சி உரை உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.தேசபக்தி, சமயப்பற்று, இளைஞர்களின் வலிமை மற்றும் முன்னேற்றம் குறித்த அவரது சிந்தனைகள், சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இளைய தலைமுறைக்கான வழிகாட்டியாக, குருவாக இருந்தார். அவரால் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ண மிஷன் செயல்பாடுகள் பல்வேறு துறைகளை சேர்ந்த தலைவர்கள், நிபுணர்களுக்கு உந்து சக்தியாக இருந்து வருகிறது.வறுமை ஒழிப்பு, அறிவியல் வளர்ச்சி, பெண்கள், இளைஞர்கள் முன்னேற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, இயற்கை பாதுகாப்பு, ஆன்மிக வலிமை, சமய ஒற்றுமை ஆகிய துறைகளில் நமது நாடு மேம்படவும், நவீன பாரதம் உருவாகவும், சுவாமிஜியின் சிந்தனைகள் தான் காரணமாக இருந்தது.இளைய சமுதாயம் ஒன்றுபட்டு அவரது கருத்துக்களை பின்பற்றியும், செயல்படுத்தியும் வந்தால், சுவாமிஜி கண்ட கனவு விரைவில் நிறுவேறும் என்பது உறுதி.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை