உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்கள் உயிர் மீதும் அக்கறை செலுத்துங்கள்! வனத்துறை களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்

உங்கள் உயிர் மீதும் அக்கறை செலுத்துங்கள்! வனத்துறை களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்

கோவை; தேசிய வன தியாகிகள் தினம், கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் நேற்று அனுசரிக்கப் பட்டது. கோவையில் நடந்த விழாவில், வன தியாகிகளுக்கான நினைவுத்துாணில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, மாநில வனப்பணிகளுக்கான மத்திய வன உயர் பயிற்சியக முதல்வர் திருநாவுக்கரசு, ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் உட்பட வனத்துறையினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கி குண்டுகள் முழங்க தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சீனிவாச ரெட்டி பேசுகையில், “வனப்பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நமது பாதுகாப்பும் முக்கியம் என்பதை உணர வேண்டும். வனம், வன உயிரினங்களைப் பாதுகாக்கும் பணியில் நமது உயிர் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். வனத்தைப் பாதுகாக்கும் பணியில், தமிழக வனத்துறையில் இதுவரை உயிர்நீத்த 40 பேருக்கும் வீர வணக்கம் செலுத்துகிறோம்,” என்றார். திருநாவுக்கரசு பேசுகையில், “வனத்தைப் பாதுகாக்கும் பணியில் உயிர் நீத்தவர்களின் தியாகங்களை நினைவு கூறும் அதே சமயம், நமது உயிரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். களப்பணிக்குச் செல்லும்போது, துறை வழங்கிய ஆயுதங்களை எடுத்துச் செல்ல வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வனத்துறையினருக்கும் குடும்பம் உள்ளது. பணியின்போது உயிரிழந்த குடும்பத்தினருக்கான உதவிகள், உரிய காலத்தில் சென்றடைவதை உயரதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்,” என்றார். நடப்பாண்டில், கணக்கெடுப்புப் பணியின்போது உயிரிழந்த வனக்காப்பாளர் மணிகண்டன், காட்டுமாடு தாக்கி உயிரிழந்த வனக்காப்பாளர் அசோக்குமார் ஆகியோரது குடும்பத்தினருக்கு, வனத்துறை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. தமிழ்நாடு வனப்பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கார்த்திகேயன், வனத்துறை உயரதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

தேசிய வன தியாகிகள் தினம் எதற்கு...

கடந்த 1730களில், ராஜஸ்தான் மாநிலம் கெஜர்லி பகுதியில், அரண்மனைத் தேவைக்காக, மரங்களை வெட்ட மன்னர் உத்தரவிட்டார். மரங்களை வெட்டாமல் பாதுகாக்க, பிஷ்னோய் இனத்தைச் சேர்ந்த அம்ரிதா தேவி தலைமையில், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து மக்களும் மரங்களைக் கட்டிப்பிடித்து வெட்டாமல் தடுத்தனர். ஆனால், மன்னரின் படை வீரர்கள் அம்ரிதா தேவி, அவரின் குழந்தைகள் உட்பட 363 பிஷ்னோய் இன மக்களை கொன்று குவித்தனர். பிஷ்னோய் இன மக்களின் தொடர் போராட்டத்தால், மரங்கள் வெட்டப்படாமல் பாதுகாக்கப்பட்டன. இயற்கையைப் பாதுகாக்க உயிர்நீத்த அம்ரிதா தேவி உள்ளிட்ட 363 பேரின் நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும், செப்., 11ல் தேசிய வன தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை