உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை செம்மொழி பூங்கா திட்டத்துக்கு இன்னும் நிதி விடுவிக்காத தமிழக அரசு: கருணாநிதியின் கனவு திட்டத்திலும் அலட்சியம்

கோவை செம்மொழி பூங்கா திட்டத்துக்கு இன்னும் நிதி விடுவிக்காத தமிழக அரசு: கருணாநிதியின் கனவு திட்டத்திலும் அலட்சியம்

கோவை: 'மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டமான, கோவை செம்மொழி பூங்கா, ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், அதற்கான நிதியை தமிழக அரசு இன்னும் விடுவிக்காமல் இருக்கிறது. குறைந்தபட்சம், 30 கோடி ரூபாய்; அதிகபட்சமாக, 50 கோடி ரூபாய் விடுவிக்கக்கோரி, மாநகராட்சி கடிதம் எழுதியும் கூட, தமிழக அரசு பாராமுகமாக இருக்கிறது.2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த, 15 அறிவிப்புகளில் முக்கியமானது, செம்மொழி பூங்கா திட்டம். மத்திய சிறையை நகருக்கு வெளியே மாற்றி விட்டு, 165 ஏக்கரில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. உடனடியாக, மத்திய சிறை நுழைவாயிலில் பெயர் பலகையும் வைக்கப்பட்டது.2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இத்திட்டத்தை அ.தி.மு.க., கிடப்பில் போட்டது. 2021ல் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், செம்மொழி பூங்கா திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. முதல்கட்டமாக, காந்திபுரத்தில், 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.167.25 கோடியில் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொள்கிறது. 2023 டிச., 18ல் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நட்டார். இவ்வளாகத்தில், 22 வகையான தோட்டங்கள் உருவாக்கப்படும் என்றதோடு, ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் அறிவித்தார்.சிறுவர் - சிறுமியரை ஈர்க்கும் வகையில் ராட்டினங்கள், ரோப் கார், ஜிப்-லைன் உள்ளிட்ட விளையாட்டு அம்சங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. செம்மொழி பூங்கா பணிக்கு, ரூ.167.25 கோடிக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. 50 சதவீத தொகையான ரூ.83.62 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும்; மீதமுள்ள தொகையை மாநகராட்சி பங்களிப்பு செய்ய வேண்டும். இதுவரை, மாநகராட்சி பொது நிதியில் இருந்து, 69 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது. மேலும், 20 கோடி ரூபாய், ஒப்பந்த நிறுவனத்தினருக்கு வழங்க வேண்டியுள்ளது. தமிழக அரசு தரப்பில், 6 கோடி ரூபாயே விடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், 50 கோடி ரூபாய் கேட்டு, மாநகராட்சியில் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.குறைந்தபட்சம், இதுவரை சமர்ப்பித்த பில்களில், 50 சதவீத கணக்கீடு அடிப்படையில், 30 கோடி ரூபாயாவது விடுவிக்க வேண்டும் என கோரப்பட்டிருக்கிறது. இச்சூழலில், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கிராந்திகுமார் இரு நாட்களுக்கு முன் ஆய்வுக்கு வந்திருந்தபோது, அவரிடமும் நிதி தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நிதி ஒதுக்கும் விஷயத்தில், தமிழக அரசு பாராமுகமாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
மே 01, 2025 19:10

தமிழ் செடி, கொடிகளில் காய்த்து குலுங்கப் போகுது...


Gopalan
மே 01, 2025 13:11

Several roads are in very bad shape,not maintained or relaid for more than a decade. The corporation/govt should give priority to maintain the roads and if any amount in balance can be utilised for development Poonga.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை