அதிகாரிகளை விடுவிக்க மறுத்தது மாநகராட்சி அதிரடி உத்தரவிட்டது தமிழக அரசு
கோவை : தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல், இரு அதிகாரிகளை கோவை மாநகராட்சி நிர்வாகம் விடுவிக்காமல் காலம் தாழ்த்தியது. நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகம் நேரடியாக தலையிட்டு, அவ்விரு அதிகாரிகளையும் விடுவிக்க உத்தரவிட்டது.கோவை மாநகராட்சியில் தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலராக இருந்தவர் ஜெயலட்சுமி; வடக்கு மண்டல உதவி கமிஷனராக இருந்தவர் ஸ்ரீதேவி.இதில், ஜெயலட்சுமியைஉடுமலை நகராட்சிக்கு இட மாறுதல் செய்து, நவ., 20ல் தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.ஸ்ரீதேவியை, கோவையில் உள்ள தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனராக பணி மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டது.ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இரு அதிகாரிகளையும், மாநகராட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்காமல், தொடர்ந்து செயல்பட அனுமதித்தது. அரசின் உத்தரவை செயல்படுத்தாமல் அலட்சியமாக இருப்பது, அரசின் நேரடி கவனத்துக்குச் சென்றது.இதையடுத்து, டிச., 31ம் தேதி பிற்பகல் முதல், கோவை மாநகராட்சியில் இருந்து, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமியை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இவர், உடுமலையில் பணியில் சேர்ந்த விவரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென, அந்நகராட்சி கமிஷனருக்கு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தர விட்டுள்ளார்.இதேபோல், வடக்கு மண்டல உதவி கமிஷனர் பொறுப்பில் இருந்து ஸ்ரீதேவியை, 31ம் தேதி பிற்பகல் முதல் விடுவித்து, தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தில் துணை இயக்குனராக பொறுப்பேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.செயல்முறை உத்தரவை பெற்றுக் கொண்டதற்கான, ஏற்பளிப்பு சான்று அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டதால், மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, இரு அதிகாரிகளும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.