எர்ணாகுளம்-பெங்களூரு ரயிலில் தமிழில் பெயர் பலகை அவசியம் பயணியர் சிரமத்தை குறைக்க வலுக்கும் கோரிக்கை
கோவை:எர்ணாகுளம் - பெங்களூரு வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயிலில், தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. எர்ணாகுளம் - பெங்களூரு இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து புறப்பட்டு தமிழகத்தின் சேலம், திருப்பூர், கோவை வழியாக எர்ணாகுளம் வரை செல்கிறது. பெங்களூருவில் இருந்து காலை, 6:10 மணிக்கு புறப்பட்டு, தமிழகத்தின் ஒசூர், தர்மபுரி, சேலம், சங்ககிரி, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ஏழு தமிழக ரயில்வே ஸ்டேஷ்களை கடந்து பாலக்காடு, திருச்சூர், அலுவா வழியாக மாலை, 4:55 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. இதேபோல், காலை, 9:10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு, 9:00 மணிக்கு கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தை அடைகிறது.ஆரம்பத்தில், 1998ல் கோவை - பெங்களூரு இடையே இந்த ரயில் இயக்கப்பட்டது. அப்போது, கோவையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. 2008ல் இந்த ரயில் சேவை எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, கோவை ரயில் நிலையத்தில் மூன்று நிமிடங்கள் மட்டுமே நின்று செல்கின்றது.மொத்தம், 583 கி.மீ., பயணிக்கும் இந்த ரயில், 319 கி.மீ., அதாவது தமிழகத்துக்குள் அதிக துாரம் பயணிக்கிறது. மொத்தம், 14 ஸ்டேஷன்களில் நிற்கும் இந்த ரயில் தமிழகத்தின் ஏழு ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது. இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் இல்லாதது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த ரயிலின் பெயர் பலகையில், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழிலும் பெயர் பலகை பொருத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.'ராக்' அமைப்பு இணை செயலாளர் சதீஷிடம் கேட்டபோது,''இன்டர்சிட்டி ரயிலை தமிழ் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தமிழில் பெயர் பலகை இருந்தால் பயணிகள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஏழை, எளிய, பாமர மக்கள் பயன்படுத்தும் ரயில்களில் அந்தந்த மாநில மொழிகள் இருக்க வேண்டும். தமிழ் மட்டுமின்றி, ஆந்திரா செல்லும் ரயிலில் தெலுங்கு, கர்நாடகா செல்லும் ரயிலில் கன்னடம் உள்ளிட்ட உள்ளூர் மொழிகள் இருப்பது அவசியம். தெரியாத மொழியில் பெயர் பலகை இருப்பதால், பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது,'' என்றார்.கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனிடம் கேட்ட போது, ''தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் இதைப்பற்றி பேசி, தமிழில் பெயர் பலகை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என தெரிவித்தார்.