மேலும் செய்திகள்
வரியினங்களை செலுத்த கமிஷனர் வேண்டுகோள்
28-Sep-2025
பொள்ளாச்சி ; 'பொள்ளாச்சி நகராட்சியில், 2025 - 26ம் ஆண்டு அரையாண்டு சொத்து வரியை, 31ம் தேதிக்குள் செலுத்தினால், சொத்து வரியில், 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்,' என நகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொள்ளாச்சி நகராட்சியில், 1.26 லட்சம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில், ஆண்டுக்கு ரூபாய் 53.93 கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருவாயை கொண்டு தான், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், நகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு சம்பளம் மற்றும் மின் கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் நகராட்சி வருவாய் நிதியிலிருந்து ஈடு செய்யப்படுகின்றன. இதற்காக வரி வசூலில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி அலுவலகம், மகாலிங்கபுரம் என முக்கியமான இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைத்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரி செலுத்த அறிவுறுத்தி வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி நகராட்சிக்கு, 2025 - 26ம் ஆண்டுக்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை, இம்மாததம் 31ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 பிரிவு, 268(2)ன் படி சொத்து வரியில், ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த சலுகையை பயன்படுத்தி சொத்து வரியை உடனடியாக செலுத்தி பயன்பெறலாம். மேலும், https://tnurbanepay.tn.gov.in என்ற இயைதளத்தின் வழியாகவும், 'ஜி பே'யில், Municipal Tax/ Service யில் உள்ள TNURBAN E --- Sevai Municipal Taxes என்ற முகவரியிலும் செலுத்தலாம். இல்லம் தேடி வரும் வரி வசூலர்களிடம் உள்ள கையடக்க கருவி வாயிலாக, பணமாகவோ அல்லது கிரடிட் அல்லது டெபிட் கார்டு வாயிலாகவோ, காசோலை மற்றும் வரைவோலை வாயிலாக செலுத்தலாம். வங்கி கணக்குகள் வாயிலாகவும் செலுத்தலாம். இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், வரி வசூலில் தீவிரம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
28-Sep-2025