டாக்சி டிரைவர் கொலை: நண்பனுக்கு ஆயுள் சிறை
கோவை; டாக்சி டிரைவர் கொலை செய்த வழக்கில், நண்பனுக்கு ஆயுள்சிறை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை, கணபதி கே.ஆர்.ஜி., நகரை சேர்ந்தவர் சிவகுமார்,25. அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான கால் டாக்சியில், சிவகுமார் டிரைவராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில், சிவகுமார், கரூர் மாவட்டம், பாலத்துறையை சேர்ந்த மணிகண்டன்,27, மற்றும் சிலர் பிரசாந்த் வீட்டின் முதல் தளத்தில், அறை எடுத்து தங்கினர். இரவு நேரத்தில், வீட்டின் மொட்டை மாடியில், நண்பர்கள் சேர்ந்து மது குடிப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர்.2020, மே 7, இரவு நேரத்தில் சிவகுமார், மணிகண்டன் மற்றும் நணபர்கள் சேர்ந்து மது குடித்தனர். அப்போது, மணிகண்டனின் தாயார் குறித்து, சிவகுமார் தவறாக பேசியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டபோது, நண்பர்கள் சமாதானம் செய்து வைத்தனர். அதன் பிறகு அனைவரும் துாங்க சென்றனர். மறுநாள் காலையில் மணிகண்டன் திடீரென எழுந்து, மற்றொரு அறையில் துாங்கிய சிவகுமார் தலையில், கட்டையால் அடித்து கொலை செய்தார். சரவணம்பட்டி போலீசார் விசாரித்து, மணிகண்டனை கைது செய்து, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு, ஆயுள்சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.