சொல்லிக்கொடுங்க பெற்றோரே!
ப ணம் வரும்; போகும் என்று சொல்வடை ஒரு பக்கம். ஆனால், பணம் வரும் போது, அதை உபயோகமாக பயன்படுத்துவதில் தான் நமது திறமை இருக்கிறது என்று, நான்கு வழிகளை சொல்கிறார், ஆர்.எஸ்.புரம் கனரா வங்கி அலுவலர் அசோக். இளமையில் சேமிப்பு பலருக்கு ஞாபகம் இருக்கும், தபால் துறையின் சஞ்சாயிகா' சேமிப்பு கணக்கு. சிறுக, சிறுக சேமிக்க ஆரம்பித்த ஒரு வழி. சேமிப்பு என்பது இளமையிலேயே ஒரு பழக்கமாக உருவெடுக்க வேண்டும். நாளடைவில் அது தொடர்ந்து விடும். பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு செய்யக் கூடிய ஒரு உதவி, சிறு சேமிப்பின் முக்கியத்துவத்தை தெரிவித்து, அவர்களுக்கு ஒரு உண்டியல் வாங்கிக் கொடுப்பது தான். தினம் அல்லது வாரத்தின் சில நாட்கள் அவர்களுக்கு பணம் கொடுத்து உண்டியலில் சேமித்து வர சொல்லி, ஆறு மாதம் கழித்து, அவர்கள் விரும்பிய பொருளை வாங்கிக் கொள்ள நேரும் போது, அந்த உண்டியல் பணம் கைகொடுக்கும். கட்டுப்பாட்டில் கடன் இன்றைக்கு மட்டுமல்ல... என்றைக்கும் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது கல்வி. பொருளாதாரத்தால் கல்வி தடை பட்டுவிடக் கூடாது என்பதற்காக, கல்விக்கடன் தாராளமாக பெறலாம். பின், அதை முறையாக கட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்ல, எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. அதற்கு, தொழில் முனைவோராவதற்கு கடன் இருக்கிறது. அதை முறையாக பயன்படுத் திக் கொள்ளலாம். அத்தியாவசியம் என்று தெரிந்தால், கடன் வாங்க வேண்டும். ஆடம்பரத்துக்கு வாங்கி அவதிப்படக் கூடாது. கடன், தங்கள் கைக்குள் கட்டுப்பட வேண்டும்என்பது மிக முக்கியம். முதலீடு மிக முக்கியம் உழைத்து ஈட்டிய பணம், 50 சதவீதம் அத்தியாவசிய செலவுகளுக்கு போக, 20 சதவீதம் சேமிப்பு மற்றும் 30 சதவீதம் முதலீடுக்கு என ஒதுக்க வேண்டும். சேமிப்பு வேறு, முதலீடு வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிதி இலக்குகளை அடைய உதவும் முதலீடுகளை, தேர்வு செய்வது முக்கியம். நிதி ஒப்பந்த பத்திரம், மியூச்சுவல் பண்ட் என ஏராளமான முதலீடு வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற பல விபரங்கள் குறித்து சரியான ஆலோசகரைத் தேர்வு செய்து, போதிய விபரங்கள் பெறலாம். முதுமையிலும் வருமானம் முதுமையில் நிலையான வருமானம் என்பது ஒருவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவுகிறது. ஓய்வு பெற்ற பின்பும், வருமானம் ஈட்டுவதற்கான வழிகளைத் திட்டமிடுவது நல்லது. மூத்த குடிமக்களுக்கு, வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில் முதலீடு செய்வதன் வாயிலாக நிலையான வருவாய் ஈட்டலாம். முதுமை காலத்தை சிறப்பாக நடத்தி செல்வதற்கு, இரண்டு முக்கிய விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. ஒன்று பணம்; மற்றொன்று ஆரோக்கியம். இரண்டுக்கும், இளமையிலேயே நன்றாக திட்டமிட வேண்டும்.