போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயரை மாற்றக்கூடாது
கோவை; போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு கோவை தெற்கு சந்திப்பு என, பெயர் மாற்றம் செய்யக்கூடாது என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பழமையான போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் கடந்த, 1862ல் துவங்கப்பட்டது. ராயபுரம், திருச்சிக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக துவங்கப்பட்ட பழமையான ரயில்வே ஸ்டேஷன். அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், சேலம் கோட்டத்துக்குட்பட்ட எட்டு ரயில்வே ஸ்டேஷன்களில் மேம் பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் கோவை, போத்தனுார் மற்றும் வட கோவை ரயில்வே ஸ்டேஷன்களும் அடங்கும். இவ்விரு ரயில்வே ஸ்டேஷன்களில், 60 சதவீத மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. கோவையின் தெற்கு பகுதியில் உள்ள போத்தனுார், வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு ரயில்வே மறுசீரமைப்பு பெரிதும் உதவக்கூடிய ஒன்றாக உள்ளது. கோவையின் இரண்டாவது சந்திப்பாக போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மாற உள்ளது.இந்நிலையில், கடந்த, 3ம் தேதி ரயில்வே மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோவை வந்தார். அவரிடம் கோவையை சேர்ந்த சில அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அதில் போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனின் பெயரை கோவை தெற்கு சந்திப்பு என, மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே ஸ்டேஷனின் பெயரை மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை போத்தனுார் மக்கள் விடுத்துள்ளனர்.போத்தனுார் ரயில் பயணர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறியதாவது:போத்தனூர் சந்திப்பு என்ற போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனின் பெயர் தொடர வேண்டும். காரணம், இந்த ரயில்வே ஸ்டேஷனுக்கும், இப்பெயருக்கும் வரலாறு இருக்கிறது. காந்தியடிகள் வந்து சென்ற ஸ்டேஷன் போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன், 1921 ம் ஆண்டு 'வேகன் டிராஜிடி' என்ற சம்பவம் இங்கு தான் நடந்தது. போத்தனூர் ரயில் நிலையம் என்ற பெயர் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பெயர். அதை மாற்றக்கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.