உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பங்கு தொகை வழங்காமல் இழுத்தடிப்பு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு

 பங்கு தொகை வழங்காமல் இழுத்தடிப்பு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு

வால்பாறை: சிக்கன நாணய கூட்டுறவு சங்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்குதொகை வழங்கப்படாததால், உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். வால்பாறை உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத்தில், ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட, 280 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு, சங்கத்தின் வாயிலாக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. சங்க உறுப்பினர்களுக்கு ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக லாபத்தொகையை கணக்கிட்டு, பங்கு தொகை வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்குத்தொகை வழங்கப்படவில்லை. தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நிர்வாகிகள் கூறியதாவது: வால்பாறையில் செயல்படும் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத்தில் பல கோடி ரூபாய் கடன் பெற்றவர்களிடம், அந்த தொகை வசூலிக்கப்படாமல் உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தொகை வசூலிக்கப்படாமல் நிலுவை உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய வருடாந்திர லாப பங்கீட்டு தொகையும் இன்று வரை வழங்கவில்லை. வரும், பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பங்கு தொகையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, கூறினர். வால்பாறை உள்ளாட்சித்துறை பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்க செயலாளர் வெங்கடேஷிடம் கேட்ட போது, ''சங்கத்தில் ஆடிட்டிங் நடந்து வருவதால், பங்கீட்டு தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2024ம் ஆண்டிற்கான ஆடிட்டிங் தற்போது தான் முடிவடைந்துள்ளது. எனவே, ஜனவரி முதல் வாரத்தில் 2023-24ம் ஆண்டிற்கான பங்குதொகை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அடுத்த கட்டமாக, 2024- 25ம் ஆண்டிற்கான பங்குதொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் வாங்கிய கடன் தொகையை வசூலிக்க நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி