அதிகாரிகள் செயலால் ஆசிரியர்கள் அதிருப்தி; கேள்விக்குறியானது மாணவர்கள் பாதுகாப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் இருந்து, வடக்கு ஒன்றியத்துக்கு மாற்றுப்பணிக்கு அனுப்பியதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.'டிட்டோஜாக்' இயக்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள், கடந்த, இரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், பெரும்பாலான ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றனர்.வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத இயக்கங்களை சார்ந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்றதால், பெரும்பாலான பள்ளிகள் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், நேற்று தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆசிரியர்கள், வடக்கு ஒன்றிய பள்ளிகளுக்கு மாற்றுப்பணிக்கு அனுப்பினர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் நிலை உருவானது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. மேலும், ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்தனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'ஒரு ஆசிரியர், எட்டு கி.மீ.,க்கு அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு மாற்றுப்பணிக்கு அனுப்ப கூடாது என விதிமுறை உள்ளது. ஆனால், 30 கி.மீ., தொலைவில் மாற்றுப்பணிக்கு அனுப்பினர்.அதே போன்று, இதுவரை இல்லாத நடைமுறையாக ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றுப்பணிக்கு அனுப்பினர். அதிகாரிகள் எப்படியாவது பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டினர்.மாணவர்களின் பாதுகாப்பு, பெண் ஆசிரியர்கள் நிலை குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை. புதிய ஒன்றியத்தில், 30 கி.மீ., பயணித்து பள்ளிகளுக்கு செல்வது சிரமம் என்பதை உணரவில்லை. இதுபோன்ற செயல்களால் மன உளைச்சல் ஏற்படுகிறது,' என்றனர்.