உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை புறநகரில் கோவில் விழாக்கள் கோலாகலம்

கோவை புறநகரில் கோவில் விழாக்கள் கோலாகலம்

சூலுார் மார்க்கெட் ரோட்டில் உள்ள வடக்கு மாரியம்மன் கோவிலில் கடந்த, 25 ம்தேதி இரவு சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. ஏப்., 1 ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. அம்மனுக்கு தினமும் அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. ஏப்., 4 ம்தேதி நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். நேற்று காலை, 11:00 மணிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து பக்தர்கள் பால் மற்றும் தீர்த்தக் குடங்கள் எடுத்து, மேள, தாளத்துடன் அம்மையை அழைத்து வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாரியம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. மதியம் அன்னதானமும், மாலை மாவிளக்கு பூஜையும் நடந்தது.

சோமனூர்

சோமனூர் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா, கடந்த ஏப். 1 ம்தேதி சாமி சாட்டுதலுடன் துவங்கியது. 7 ம்தேதி விநாயகர் பொங்கல் வைத்தலும், மறுநாள் அக்னி கம்பம் நடும் விழாவும் நடந்தது. நேற்று அதிகாலை, அம்மை அழைத்தலும், ஆபரணங்கள் எடுத்து வந்து, காலை, 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. தொடர்ந்து மாவிளக்கு பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. காலை, 8:00 மணிக்கு பூவோடு எடுத்து வந்த பக்தர்கள், பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், மகா அபிஷேகமும் நடக்கிறது.

அரசூர்

அரசூர் ஊராட்சி ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ அன்னமார் சுவாமி கோவில் பூச்சாட்டு திருவிழா, 7 ம்தேதி முனியப்பன் பூஜையுடன் துவங்கியது.நள்ளிரவு முனி விரட்டுதல் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, பூச்சாட்டுதல் நடந்தது. நேற்று அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடந்தது. இரவு தீப்பந்தம் எடுத்து பக்தர்கள் ஆடுகின்றனர். இன்று இரவு பெருமாளுக்கு கவாளம் எடுத்தலும், நாளை, கொம்பன்களை சுவாமிகளுக்கு படைத்து, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது. 12 ம்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்துவருகின்றனர்.

குண்டம் விழா

மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது.கோவிலின், 37ம் ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த மாதம், 25ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஏப்ரல் 1ம் தேதி ஆடு குண்டம் திறக்கப்பட்டது. ஏழாம் தேதி அம்மன் அழைப்பும், 8ம் தேதி ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகங்களும், அக்னி சட்டியும் அழைத்து வந்தனர்.நேற்று காலை, 6:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் சுவாமியை கோவிலுக்கு அழைத்து வந்தனர். அப்போது பக்தர்கள் அலகு குத்தி உடன் வந்தனர். கோவில் தலைமை பூசாரி பழனிசாமி குண்டத்துக்கு பூஜை செய்து, பூ பந்தை உருட்டி விட்டு, முதலில் குண்டம் இறங்கினார். அதைத் தொடர்ந்து பூஜை தட்டுடன் அருள்வாக்கு பூசாரி காளியம்மாள், சக்தி கரகம், அக்னி சட்டி, அலகு குத்திய பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண், பெண் பக்தர்கள், சிறுவர்கள் என ஏராளமானவர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மன் சுவாமிக்கும், மகா முனிஸ்வரருக்கும் அக்னி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அலங்கார பூஜை நடந்தது.விழாவில் மஞ்சள் நீராட்டும், பாலப்பட்டி கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை, 108 இளநீர் அபிஷேகம், மறுபூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

அன்னுார்

குன்னத்தூராம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா கடந்த 25ம் தேதி துவங்கியது. கடந்த 1ம் தேதி கம்பம் நடப்பட்டது. நேற்று முன் தினம் இரவு அணி கூடை மற்றும் தீர்த்த குடங்களை பக்தர்கள் எடுத்து வந்தனர். அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. கரகம் எடுக்கப்பட்டது.நேற்று காலை 6:30 மணிக்கு சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து பக்தர்கள் மாவிளக்குகளுடன் ஊர்வலமாக வந்தனர். கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. முளைப்பாலிகை எடுக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று மாலை 4:00 மணிக்கு எருது விரட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு அச்சம் பாளையம் சண்முக குழுவின் பஜனை நடக்கிறது. நாளை (11ம் தேதி) காலை 8:00 மணிக்கு அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் உள்ள, ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில், 15ம் ஆண்டு திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது. கோவிலில் ஏழாம் தேதி இரவு கிராம சாந்தி பூஜை நடந்தது. எட்டாம் தேதி காலை மகா கணபதி ஹோமம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை ஒன்பது மணிக்கு, அம்மனுக்கு பூச்சாட்டு பூஜை நடைபெற்றது. வருகிற, 15ம் தேதி அக்னி கம்பம் நடுதலும், 18ம் தேதி திருவிளக்கு பூஜையும், 20ம் தேதி ராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில், கரகம், பூச்சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று இரவு ராஜா மகா சக்தி வள்ளிக்கும்மி குழுவினரின் அரங்கேற்ற நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. 22ம் தேதி அம்மன் அழைப்பும், 23ம் தேதி சக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதலும், மதியம் அலங்கார பூஜையும், மாவிளக்கு எடுத்தலும் நடைபெற உள்ளது. 24ம் தேதி மஞ்சள் நீராட்டும், 25ம் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர். -நமது நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை