உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விமான நிலைய கையக நிலத்தில் எல்லை கற்கள் நட டெண்டர்

விமான நிலைய கையக நிலத்தில் எல்லை கற்கள் நட டெண்டர்

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்திய நிலத்தின் எல்லைகளை அளவீடு செய்து கற்கள் நடுவதற்கு, விமான நிலைய ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்திய, 451.74 ஏக்கர் பட்டா நிலம், 20.58 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் சேர்த்து, 472.32 ஏக்கர் நிலத்தை, எவ்வித நிபந்தனையுமின்றி, 99 ஆண்டு குத்தகைக்கு, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு தமிழக அரசு வழங்கியது. 470.175 ஏக்கர் நிலத்தை ஏற்பதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு ஆணையம் கடிதம் வழங்கியது. மேலும், ராணுவத்துறைக்கு சொந்தமான, 134.32 ஏக்கரில் பணி செய்து கொள்ள முன்அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, புதிதாக கையகப்படுத்தியுள்ள நிலத்தின் எல்லைப் பகுதியை அளவீடு செய்து, எல்லைக்கற்கள் நடுவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. மேலும், எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வாகனங்களில் சென்று வரும் வகையில் நிலத்தை சுத்தம் செய்ய வேண்டும். இப்பணியை, 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து, அடுத்த கட்டமாக கான்கிரீட் சுவர் கட்டப்படும். 'சிசி டிவி' கேமரா பொருத்துவது, சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.மார்ச் 1ம் தேதி பிற்பகல், 5:30 மணிக்குள் டெண்டர் ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும். இரு கவர் நடைமுறையில் டெண்டர் பெறப்படும். ஒப்பந்தம் கோரும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப தகுதி இருக்கிறதா என்பதை இறுதி செய்யும் முதல் கவர், மார்ச், 4ம் தேதி காலை, 11:30 மணிக்கு திறக்கப்படும். தொகை குறிப்பிட்டு சமர்ப்பிக்கும் இரண்டாவது கவர், மார்ச் 7ம் தேதி மாலை, 3:00 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறுகையில், ''பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஏற்றுக் கொண்டதாக, விமான நிலைய ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது. 8 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, கோர்ட்டில் வழக்கு இருக்கிறது; அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு தீர்ப்பு வந்து விட்டது; இன்னும் இரண்டு வழக்கு விசாரணையில் இருக்கிறது. அந்நிலங்கள் இன்னும் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை. எந்த பிரச்னையுமின்றி, 470.175 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆணையம் தரப்பில் 'சர்வே டீம்' நியமிக்கப்பட்டு, அளவீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு கி.மீ., துாரத்துக்கு அளவீடு செய்யப்படுகிறது,'' என்றார்.விமான போக்குவரத்து பகுப்பாய்வாளர் ஷ்யாம் மோகன் பிரபு கூறுகையில், ''விமான நிலையத்துக்கு கையகப்படுத்திய நிலத்தை அளவீடு செய்து, எல்லை கற்கள் நட டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. இந்திய விமான நிலைய ஆணையம் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து விரிவாக்கப் பணியை உடனடியாக துவக்க வேண்டும். இத்திட்டம், 15 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. இனியும் தாமதம் ஏற்படக் கூடாது. நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஆணையம் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ