குருந்தமலை கோவிலில் தைப்பூச தேரோட்டம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், குருந்தமலையிலும், நேற்று தைப்பூச தேரோட்டம் நடந்தது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி தேருக்கு எழுந்தருளினார். வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, எம்.எல்.ஏ., செல்வராஜ், கோவை மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம், சண்முகசுந்தரம் கவுன்சிலர்கள் தனசேகர், காண்டீப்பன் உள்பட முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. குருந்தமலையில் தேரோட்டம் காரமடை அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம், கடந்த 5ம் தேதி நடந்தது. நேற்று வள்ளி, தெய்வானை சமேதராக குழந்தை வேலாயுத சுவாமி தேருக்கு எழுந்தருளினார். தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகனப்பிரியா, அறங்காவலர்கள் குழந்தைவேலு, சாவித்திரி, சுரேஷ்குமார், முருகன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். தேர் குருந்தமலையை சுற்றி வந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்துச் சென்றனர். _____ படங்கள் உண்டு.