தீ விபத்தால் குப்பை அளவு குறைந்ததாம்! மறுஅளவீடு செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றம்
கோவை : வெள்ளலுார் கிடங்கில் தேங்கியுள்ள குப்பையை 'பயோமைனிங்' முறையில் அழிக்க, மறுஅளவீடு செய்வதற்கு, மாமன்ற கூட்டத்தில் நேற்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வெள்ளலுார் கிடங்கில் மலைக்குன்று போல் கொட்டியுள்ள பழைய குப்பை, 'பயோமைனிங்' திட்டத்தில் அழிக்கப்படுகிறது. பேஸ்-2 திட்டத்தில், மீதமுள்ள, ஏழு லட்சத்து, 43 ஆயிரத்து, 287 மெட்ரிக் டன் பழைய குப்பையை அழிக்க, மாநகராட்சி சார்பில் ரூ.54.84 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. மத்திய அரசு பங்கு - 25 சதவீதம்; மாநில அரசு பங்கு - 16 சதவீதம்; மாநகராட்சி பங்கு - 59 சதவீதம் நிதி பங்கீடு செய்து, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.கடந்த ஏப்., மாதம் டெண்டர் கோரப்பட்டது. லோக்சபா தேர்தல் நடவடிக்கை இருந்ததால், காலநீட்டிப்பு செய்து, டெண்டர் இறுதி செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எரிந்தது...குறைந்தது!
இச்சூழலில், ஏப்., 6 முதல், 17 வரை வெள்ளலுார் கிடங்கில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு, குப்பை எரிந்து தீக்கிரையானது. அதனால், குப்பை அளவு குறைந்துள்ளதாக, தீயணைப்பு துறையினர் கடிதம் வழங்கியுள்ளனர்.வெள்ளலுார் கிடங்கில் தேங்கியுள்ள அனைத்து குப்பையையும் அழிக்க, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தி இருப்பதால், மறுஅளவீடு செய்ய, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, மறுஅளவீடு செய்து டெண்டர் கோர மாமன்ற கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிபுணர் குழுவினர் ஆய்வு செய்வர்'
குப்பை பிரச்னை தொடர்பாக, அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் கேள்வி எழுப்பியபோது, ''மறுஅளவீடு செய்வதன் மூலம் குப்பை அளவு குறையுமா. மதிப்பீடு தொகை தற்போது நிர்ணயித்துள்ளதை விட குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா. கவுன்சிலர்கள் எழுதிய கடித நகல்கள் மற்றும் தீயணைப்பு அதிகாரி கொடுத்த கடித நகல், மன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை' என கேட்டார்.இதற்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பதிலளிக்கையில், ''வெள்ளலுார் கிடங்கில் தேங்கியுள்ள குப்பையை, அண்ணா பல்கலை குழு ஏற்கனவே ஆய்வு செய்து அளவீடு செய்தது. மீண்டும் அக்குழுவினர் அளவீடு செய்வர். தீ விபத்து ஏற்பட்டதால், பழைய குப்பை அளவீடு குறையும். அதேநேரம், கிடங்கில் உள்ள அனைத்து குப்பையையும் அழிக்க, தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளதால், எவ்வளவு பரப்புக்கு தேங்கியிருக்கிறது என அளவீடு செய்ய உள்ளோம். அதனால், மதிப்பீடும், அளவும் மாறுபடும்,'' என்றார்.
'மின் கம்பத்தை இடம் மாத்துங்க'
ம.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் சித்ரா பேசுகையில், ''துாய்மை பணியாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்; வார்டுக்கு தேவையான தொழிலாளர்கள் நியமிக்க வேண்டும். மழை நீரோடு சாக்கடை நீரும், வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மழை நீர் வடிகால் துார்வார வேண்டும். வடிகால் பாதையில் இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும். அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும், ஒரு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.