முதல்வர் திறந்தும் பயனில்லாத தொழிலாளர்கள் தங்கும் விடுதி
வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலை எஸ்டேட்களில், 20,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வெளியூர் சென்று திரும்பும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் வால்பாறை நகரில் தங்கி செல்ல வசதியாக, தொழிலாளர் நலத்துறை சார்பில், 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டப்பட்டது. காணொலி வாயிலாக, ஆக., 25ல் முதல்வர் ஸ்டாலின் விடுதியை திறந்து வைத்தார்.இங்கு தொழிலாளர்கள் தங்குவதற்கு, 200 ரூபாய், சுற்றுலா பயணியர் தங்குவதற்கு, 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் கூறுகையில், 'தோட்ட தொழிலாளர்களின் வசதிக்காக, அரசின் சார்பில் திறக்கப்பட்டுள்ள தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் விபரம் குறித்து எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர் நலத்துறைக்கு தெரிவிக்காததால், தங்கி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என்றனர். தொழிலாளர் நல வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஒரே நேரத்தில் 50 பேர் தங்கி செல்ல வசதியாக அறைகள் உள்ளன. எஸ்டேட் தொழிலாளர்களின் விபரம் குறித்து, இதுவரை விபரம் வழங்கவில்லை. முறைப்படி பட்டியல் வந்த பின், அரசு நிர்ணயித்த குறைந்த கட்டணத்தில் தொழிலாளர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர்' என்றனர்.