குப்பை ஹாட் ஸ்பாட் உருவாக்குவதே மாநகராட்சிதான்! மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டம், அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் தெய்வயானை தலைமை வகித்தார். நிர்வாக பொறியாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம்: பிரவீன்ராஜ் (42வது வார்டு): வார்டுக்கு உட்பட்ட சில இடங்களில் தெருவிளக்குகள் கூடுதலாக இருப்பதாக கூறி, அவற்றை அகற்றி, வேறிடத்தில் பொருத்திக் கொடுக்கச் சொன்னேன். 71 தெருவிளக்குகள் அகற்றப்பட்டன. அவற்றில், 10 விளக்குகளை வேறிடங்களில் பொருத்தச் சொன்னேன். எனது வார்டில் எங்கும் பொருத்தவில்லை. அவை எங்கே போனது? கார்த்திக் செல்வராஜ் (72வது வார்டு): வார்டு வாரியாக முகாம் நடத்தப்பட்டு இருக்கிறது. தலா மூன்று கோரிக்கைகள் வழங்கியுள்ளோம். விரைந்து நிதி ஒதுக்கி, டிச. மாதத்துக்குள் பணியை செய்தால் மட்டுமே தேர்தல் நேரத்தில் வீதிக்குள் செல்ல முடியும். சபிதா, உதவி நிர்வாக பொறியாளர்: வார்டு சிறப்பு கூட்டத்தில் பரிந்துரைத்த கோரிக்கைகள் 'முதல்வர் முகவரி' தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். திட்ட மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தியுள்ளனர். கண்டிப்பாக அவ்வேலைகள் செய்யப்படும். இளங்கோவன், நிர்வாக பொறியாளர்: பாதாள சாக்கடைக்கு தோண்டிய பகுதிகளில் 'பேட்ச்' ஒர்க் நடந்து வருகிறது. மேற்கு மண்டலத்தில் மட்டும் ரோடு போடுவதற்கு 40 கோடி கோரப்பட்டுள்ளது. அழகு ஜெயபாலன் (71வது வார்டு): ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் நடைபாதைகள் கற்கள் பெயர்ந்துள்ளன. 'வாக்கிங்' செல்வோர் தடுமாறி, கீழே விழுகின்றனர். ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. மீண்டும் சிக்னல் நடைமுறை கொண்டு வர வேண்டும்.ரோடுகள் மோசமாக இருக்கின்றன. தேர்தலுக்கு முன் சீரமைக்க வேண்டும். கிருஷ்ணமூர்த்தி (33வது வார்டு): குப்பை அள்ளுவதற்கு ஒவ்வொரு வார்டுக்கும் எத்தனை துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எண்ணிக்கையை குறைத்தது ஏன்? தனியார் ஒப்பந்த நிறுவன பிரதிநிதி: மேற்கு மண்டலத்துக்கு 738 தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாகனங்கள் ஏற்பாடு செய்து, குப்பை அள்ளுவது மட்டுமே எங்களது பணி. (வார்டு வாரியாக இதற்கு முன் எத்தனை பேர் பணிபுரிந்தனர். இப்போது எத்தனை பேர் இருக்கின்றனர் என்கிற பட்டியலை வாசித்தார். அனைத்து வார்டுக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்திருந்ததால், கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்). சம்பத் (35வது வார்டு): மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு வார்டுக்கும் துாய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும். 140 வீதிகள் இருக்கின்றன. குறைந்த தொழிலாளர்களை கொண்டு எப்படி பராமரிக்க முடியும். குமுதம் (37வது வார்டு) : நவாவூர் பிரிவு பகுதியில் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. விரைந்து செய்ய வேண்டும். பொதுமக்கள் திட்டுறாங்க. ரோடு போடும் வேலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. காயத்ரி (44வது வார்டு) : பூங்கா பாதுகாப்புக்கு காவலாளி நியமிக்க வேண்டும். பூங்காவில் தவறு நடந்தால் யார் பொறுப்பு. சின்னம்மாள் வீதியில் குடிநீர் தொட்டி கட்டும் பணி தாமதமாக நடக்கிறது. சூயஸ் நிறுவனத்தினர் அலட்சியமாக இருக்கின்றனர். வீடு வீடாகச் சென்று குப்பையை தொழிலாளர்கள் சேகரிக்கின்றனர். வண்டி வராவிட்டால் ஓரிடத்தில் மொத்தமாக கொட்டி விட்டு, அடுத்த வீதிக்குச் செல்கின்றனர். குப்பை கொட்டும் 'ஹாட் ஸ்பாட்'டுகளை மாநகராட்சியே உருவாக்குகிறது. ஆனால், பொதுமக்கள் கொட்ட தடை விதித்து கேமரா வைத்திருக்கிறோம்; அபராதம் விதிக்கிறோம். உண்மை நிலைமையை வெளியே சொல்ல, துாய்மை பணியாளர்கள் தயங்குகிறார்கள். பத்மாவதி (40வது வார்டு): கவுண்டம்பாளையம் -வடவள்ளி குடிநீர் திட்டத்தில் லிங்க் கொடுத்து விட்டால், ரோடு போட்டு விடலாம். தெருவிளக்குகளுக்கான ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சாந்தி (41வது வார்டு): மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை அடையாளம் கண்டு, கமிஷனர் பெயருக்கு மாற்ற வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான இடம் அடுத்தவர் பெயரில் இருக்கிறது. சைட் போட்டு விற்று வருகின்றனர். குட்டையை அளவீடு செய்ய சர்வேயர் வருவதில்லை. குட்டையில் 'சைட்' போட்டு விற்கின்றனர். குட்டையை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.
'தினமலர் வார்டு விசிட்
திக்... திக்... என இருக்கு'
கல்விக்குழு தலைவர் மாலதி பேசும்போது, ''மழை நீர் வடிகால் துார்வார ஆட்கள் வருவதில்லை. குப்பை தேங்கியிருந்தால், 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடுகின்றனர். வாரந்தோறும் திங்கட்கிழமை வார்டு விசிட் வருகிறது. இந்த வாரம் எந்த வார்டு வருமோ என்று நினைத்து 'திக்... திக்...' என இருக்கிறது. எங்கள் வார்டுக்கு 8 பேர் துாய்மை பணிக்கு வருவதில்லை. பதிலி தொழிலாளர்கள் நியமிக்க வேண்டும். வண்டி ரிப்பேரானால், மீண்டும் வருவதற்கு மூன்று நாட்களாகி விடுகிறது,'' என்றார்.
'எக்ஸ்ட்ரா ஆட்கள்
கேட்டுள்ளோம்'
மண்டல தலைவர் தெய்வயானை பேசும்போது, ''துாய்மை பணியாளர்கள் குறைவாக ஒதுக்கியுள்ளனர். எக்ஸ்ட்ரா ஆட்கள் கேட்டுள்ளோம். சூயஸ் நிறுவனத்தில் இருந்து அனைத்து பிரிவு ஊழியர்களும் கூட்டத்துக்கு வர வேண்டும். ஐந்து லட்சம் ரூபாய்க்கான பணிகள் ஏதேனும் வார்டுக்குள் செய்ய வேண்டியிருந்தால், எழுதிக் கொடுங்கள். இம்மாத இறுதியில் மீண்டும் கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றலாம்,'' என்றார்.