எஸ்டேட் தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு
வால்பாறை; வால்பாறையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வால்பாறை அடுத்துள்ளது ைஹபாரஸ்ட் எஸ்டேட். இங்கு, 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த எஸ்டேட்டில், 40 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, பி.எப்., பென்சன் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படவில்லை.இதனை தொடர்ந்து, எஸ்டேட் தொழிலாளர்கள் நேற்று காலை பணிக்கு செல்லாமல், எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற, வால்பாறை எம்.ஜி.ஆர்., தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் அமீது, தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்திடம் பேசினார்.தொழிலாளர்களின் பிரச்னைக்கு மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என தொழிற்சங்க தலைவர் தெரிவித்ததன் பேரில், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.குறிப்பிட்ட தேதியில் தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். போராட்டத்தில், தொழிற்சங்க தலைவர் அருணகிரிபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.