வாரச்சந்தை வியாபாரிகளிடம் ஆளுங்கட்சியினர் வசூல்; மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்த எதிர்பார்ப்பு
கோவை; கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டில் தரைக்கடை போடும் வாரச்சந்தை வியாபாரிகளிடம், கடைக்கு, 50 ரூபாய் வீதம் ஆளுங்கட்சியினர் வசூலிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளோ, போக்குவரத்து போலீசாரோ கண்டுகொள்வதில்லை.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துடியலுார், கணபதி, விளாங்குறிச்சி, சிங்காநல்லுார், மசக்காளிபாளையம், கோவைப்புதுார், பீளமேடு புதுார், ராமநாதபுரம், புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாரச்சந்தை நடத்தப்படுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் சந்தை வளாகம் உருவாக்கப்பட்டு, குத்தகைக்கு விடப்பட்டு இருந்தால், குத்தகைதாரர் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பீளமேடு, புலியகுளம் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் வாரச்சந்தை கூடுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. ரோட்டின் இருபுறமும் தரைக்கடைகள் நடத்தப்படுகின்றன. காய்கறி, பழங்கள், மாவு பாக்கெட்டுகள், பூக்கள், செருப்பு, வளையல், மோதிரம், கோல்டு கவரிங் செயின் போன்ற பேன்சி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்கப்படுகின்றன. மாலை, 5:00 மணியில் இருந்து இரவு, 10:00 மணி வரை வியாபாரம் நடக்கிறது. இதன் மூலம் சிறு வியாபாரிகள் பயனடைகின்றனர். 200க்கும் மேற்பட்டோர் கடை நடத்துகின்றனர்.இவ்வியாபாரிகளிடம் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், கடைக்கு, 50 ரூபாய் வீதம் வசூலிக்கின்றனர். ஒரு பெண், ஒவ்வொரு கடையாகச் சென்று பணம் வசூலிக்கிறார். அனைத்து வியாபாரிகளும் மறுக்காமல், 50 ரூபாய் கொடுக்கின்றனர். பணத்தை பெற்றுக் கொண்டதும், நோட்டில் பதிவு செய்து கொள்கிறார். ஆளுங்கட்சியினரால் நியமிக்கப்பட்ட அப்பெண், வியாபாரிகளிடம் பணம் வசூலித்துக் கொடுக்கிறார். அத்தொகையை கட்சி நிர்வாகிகள் பிரித்துக் கொள்கின்றனர். சில இடங்களில் பொதுக்காரியங்களுக்கு பயன்படுத்துவதாக, கட்சியினர் தெரிவிக்கின்றனர். இவ்வகையில், பீளமேடு புதுார், சேரன் மாநகர், கணபதி, ஆவராம்பாளையம் போன்ற பகுதிகளில் நடக்கும் வாரச்சந்தைகளில், கடைகளின் அளவுக்கேற்ப, 50 முதல், 250 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.தி.மு.க., வட்டாரத்தில் விசாரித்தபோது, 'வாரச்சந்தை கூடுமிடங்களில் கடை நடத்துவோரிடம் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த கட்சியினர் வசூலித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது' என்றனர்.சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, கூறியதாவது:ராமநாதபுரத்தில் சந்தை வளாகம் இல்லை; 80 அடி ரோட்டின் இரு புறமும் கடை நடத்துகிறோம். ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கே மீண்டும் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியின்போது, ஒவ்வொரு கடையிலும், 20 ரூபாய் வசூலிக்கப்பட்டது; தி.மு.க., ஆட்சியில், 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வியாபாரிகளுக்கு பிரச்னை என்றால், ஆதரவுக்கு கட்சியினர் வருகின்றனர்.என்றாலும் கூட ரோட்டில் கடை நடத்துவது நிரந்தரமல்ல. எப்போது வேண்டுமானாலும் அப்புறப்படுத்தலாம். மாநகராட்சி நிர்வாகமோ அல்லது போலீசாரோ, கடைகளை எடுக்கச் சொல்லலாம். இப்பகுதியில் நடக்கும் வியாபாரம் மற்றும் வியாபாரிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் மாநகராட்சி சார்பில் சந்தை வளாகம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். குத்தகை மூலம் மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். பொதுமக்கள் ஒரே இடத்தில் பொருட்கள் வாங்குவர். ரோட்டில் போக்குவரத்து சிரமம் ஏற்படாது. வாரச்சந்தை கூடும் பகுதிகளை அடையாளம் கண்டு, மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.