உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடம்; இன்னொரு வெள்ளலுார் ஆகிறது சமூக விரோத செயல்களுக்கு குறையில்லை

வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடம்; இன்னொரு வெள்ளலுார் ஆகிறது சமூக விரோத செயல்களுக்கு குறையில்லை

கோவை; 'கொடிசியா' எதிரே வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடம், இன்னொரு வெள்ளலுார் குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கோவை 'கொடிசியா' எதிரே, வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமாக, 32 ஏக்கர் நிலம் உள்ளது. 2021ல் சாக்கடை கால்வாய், குடிநீர் குழாய், நான்கு தண்ணீர் தொட்டிகள், நான்கு திசைகளிலும், 17 மீ., அகலத்தில் ரோடு உள்ளிட்ட வசதிகளுடன், பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் துவங்கின. அதன்பின், பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் புதர்மண்டி கிடப்பதுடன், இரவு நேரத்தில் குப்பை கொட்டுகின்றனர். சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. அவிநாசி ரோட்டில் இருந்து கொடிசியா வரும் வாகனங்கள், தண்ணீர் பந்தல், விளாங்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு மாற்றுச்சாலையாகவும், வாரியத்தின் வழித்தடத்தை பயன்படுத்தி வந்தனர். திருப்பதி வெங்கடாசலபதி நகர் மனை, வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் பக்தவத்சலம் கூறியதாவது: குப்பை கொட்டுவதை காரணம் காட்டி, வாரிய இடத் தில் நான்கு திசைகளிலும் அமைக்கப்பட்ட தரைப்பாலத்தின் பக்கவாட்டில், குழி தோண்டி வாகனங்கள் செல்ல தடை ஏற்படுத்தியுள்ளனர். கொடிசியா வளாகத்தில் நிகழ்ச்சி, மைதானத்தில் அரசியல் கூட்டங்கள் நடந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அச்சமயங்களில், வாரியத்துக்குச் சொந்தமான இடத்தின் வழியே செல்லும் சர்வீஸ் ரோட்டை, விளாங்குறிச்சி உள்ளிட்ட, இடங்களுக்கு செல்ல வாகனங்கள் பயன்படுத்தி வந்தன. லட்சுமி கார்டன் பகுதி மக்களும், இந்த ரோடு வழியாக ஐந்து நிமிடங்களில் விளாங்குறிச்சி ரோட்டை அடைய முடியும். வாரிய இடத்தில் இருந்து தெற்கே, அவிநாசி ரோடு செல்லும் வகையில், 40 அடி ரோடும் உள்ளது. இரவு நேரத்தில் இங்கு, குப்பை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

'பாதுகாப்பு வேலி அமைக்கப்படும்'

கோவை மண்டல வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் ஜேக்கப் நாயகத்திடம் கேட்ட போது, ''வாரியத்துக்கு சொந்தமான இடத்தின் மீதுள்ள வழக்குகள் முடிவுக்கு வந்ததும், விற்பனை உள்ளிட்ட மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்தல், எச்சரிக்கை பலகை நிறுவுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேம்பாட்டு பணிகள் தொடர்பாக வாரிய உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார். மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி கூறுகையில், ''சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்வார்கள். இதுகுறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை